ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவுக்கு வர மறுத்த அமிதாப் பச்சனை இப்போது சமயம் பார்த்து அவமானப்படுத்தியுள்ளது ஐஐஎப்ஏ அமைப்பு. டொரன்டோவில் நடைபெறவுள்ள விருது விழாவுக்கு வரத் தேவையில்லை என்று அமிதாப்பிடம் அந்த அமைப்பு கூறி விட்டதாம்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் ரத்தக் கறை கூட மறையாத நிலையில், கொழும்பு நகரில் கடந்த ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவை நடத்த ஆதரவு கொடுத்தது இலங்கை அரசு. இதில் பங்கேற்க இந்தியத் திரையுலகினரும் ஆர்வத்தோடு தயாராகினர். தமிழகத்திலிருந்தும் மணிரத்தினம் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை முக்கியமாக எதிர்பார்த்திருந்தது இலங்கை அரசு. ஆனால் இந்த விழாவுக்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியத் திரையுலகினர் அனைவரும் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. உலகத் தமிழர்களும் கோரிக்கை விடுத்தனர். பல வகையான போராட்டங்களும் நடந்தன. மும்பையில் அமிதாப் பச்சன் வீடு முன்பும் போராட்டம் நடந்தது.
இதையடுத்து தமிழர்களது உணர்வுகளை மதிப்பதாக கூறிய அமிதாப் பச்சன், தானோ அல்லது தனது குடும்பத்தினரோ விழாவுக்கு செல்ல மாட்டோம் என்று கூறி விட்டார்.
அதேபோல தமிழ்த் திரையுலகினரும் விழாவைப் புறக்கணித்தனர். இந்தித் திரையுலகிலிருந்தும் பெரும்பாலானோர் போகவில்லை. உப்புச்சப்பில்லாத விவேக் ஓபராய் உள்ளிட்ட சிலர் மட்டுமே போனதால் விழா பிசுபிசுத்துப் போனது. இதனால் ஐஐஎப்ஏவும், இலங்கை அரசும் பெரும் அதிர்ச்சி அடைந்தன.
இந்த நிலையில் இந்த ஆண்டு டோரண்டோவில் நடைபெறவுள்ள விழாவுக்கு அமிதாப்பை அழைக்காமல் அவமதித்துள்ளது ஐஐஎப்ஏ. இதை அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் தள செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஐஐஎப்ஏவுக்கு வரவில்லை. எங்களது சேவை தேவையில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். நானாக வரவில்லை என்று கூறவில்லை. அவர்கள்தான் எங்களது சேவை, தேவை, தேவையில்லை என்று கூறியுள்ளனர். இலங்கையிலும் கூட இதுதான் நடந்தது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
கடந்த 2000மாவது ஆண்டு முதல் இந்த சர்வதேச இந்தி திரைப்பட விழா வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் கொழும்பு விழாவுக்கு முன்பு வரை அனைத்து விழாக்களிலும் முக்கிய விருந்தினராக அமிதாப் பச்சன்தான் கலந்து கொண்டார். மேலும், அதன் பிராண்ட் அம்பாசடராகவும் அமிதாப் தான் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கொழும்பு விழாவுக்கு அமிதாப் வர மறுத்ததால் கடுப்பான ஐஐஎப்ஏ இப்போது அவரை அவமதித்துள்ளது.
இந்திய திரைப்பட விருது என்று பெயர் வைத்துக் கொண்டாலும் கூட இது முற்றிலும் இந்திப் படங்களுக்கான விழாவாகும். இந்திப் படங்களுக்கு விருது கொடுத்து தங்களைத் தாங்களே குளிர்வித்துக் கொள்ளும் விழா இது. முன்பு ஒருமுறை, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விழாவில் வைத்தே நிகழ்ச்சி அமைப்பாளர்களை கடுமையாக சாடினார். உங்களுக்கெல்லாம் இந்தி மட்டும்தான் இந்திய சினிமா என்ற நினைப்பா?. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கில் எல்லாம் சினிமாவே வருவதில்லையா?. உண்மையில் இந்தியை விட தென்னிந்தியாவில்தான் அதிக திரைப்படங்கள் தயாராகிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், இந்த விழாவுக்கு இனிமேல் இந்தி திரைப்பட விழா என்றும் பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கடுமையாக சாடியிருந்தது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment