ஐகோர்ட் வளாகத்தில் ரகளை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, நடிகை வனிதா விஜயகுமார் மீது போலீசில் நடிகர் ஆகாஷின் வக்கீல் புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜயகுமார், அவரது இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார், அவரது கணவர் ஆனந்தராஜன், வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ் ஆகியோரிடையே கடந்த சில மாதங்களாக குடும்ப சண்டை நடக்கிறது. வனிதா மகன் விஜய் ஸ்ரீ ஹரியை யார் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக ஐகோர்ட், சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வனிதா, ஆனந்தராஜன், ஆனந்தராஜனின் நண்பர் ஜாகிர், ஆகாஷ் ஆகியோர், ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்தபோது, இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து வனிதா தரப்பினர் மீது ஆகாஷின் வக்கீல் சசிகுமார், ஐகோர்ட் போலீசில் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: ஐகோர்ட் மற்றும் குடும்பநல கோர்ட்டில் உள்ள வழக்குகளில், ஆகாஷ் சார்பில் நான் ஆஜராகிறேன். ஐகோர்ட்டில் இவர்களது வழக்கு விசாரணை முடிந்து, பிற்பகல் 3 மணிக்கு வெளியே வந்தேன். கோர்ட் வளாகத்தில், ரிட் மனு தாக்கல் பிரிவு அருகே வந்தபோது, வனிதா என்னிடம் திடீரென ரகளை செய்தார். படியிலிருந்து கீழே பிடித்து தள்ளி, "என் குழந்தை மட்டும் எனக்கு கிடைக்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என, அவதூறான வார்த்தைகளால் திட்டினார்.
வனிதாவின் கணவர் ஆனந்தராஜன், அவரது நண்பர் ஜாகிர் ஆகியோர் என்னை பிடித்து மீண்டும் மீண்டும் கீழே தள்ளினர். "ஆகாஷ், வனிதா இடையிலான பிரச்னையில் தலையிட்டால் கொன்று விடுவேன் என, ஆனந்தராஜன் என்னை மிரட்டினார். எனவே, வனிதா, ஆனந்தராஜன், ஜாகிர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வனிதா தரப்பால் எனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்துராஜா, எஸ்.ஐ., வேணுகோபால் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment