சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆக இருப்பவர் அங்கயற்கண்ணி என்கிற கயல்விழி. இவர் தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தமிழர் பகுதிக்கு சென்றார். இலங்கை ராணுவத்திடம் அனுமதி பெற்று ஒமந்தையில் உள்ள தமிழர்கள் அகதிகள் முகாமுக்கு சென்றார். அங்கு அவர்களை பார்த்து பேசி விட்டு திரும்பிய போது தனது செல்போனில் அந்த முகாமை போட்டோ எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பெண் வக்கீல் அங்கயற்கண்ணி, அவரது உதவியாளர் திருமலை ஆகிய இருவரையும் இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். இலங்கை ராணுவத்தின் இச்செயலுக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சங்கம் சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எங்கள் சங்க உறுப்பினர் கயல்விழி, அவரது உதவியாளர் திருமலை ஆகியோர் சட்டப்படி சுற்றுலா விசாவில் முறைப்படி சென்றுள்ளனர். ஆனால், அவர்களை எந்தவிதமான காரணமின்றி இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இதற்கு எங்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் உள்ள வக்கீல்கள் கடுமையாக போராடினார்கள். எனவே தான் அவர்களுக்கு எதிராக ராணுவம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் உடனடியாக தலையீட்டு வக்கீல் அங்கயற்கண்ணி, அவரது உதவியாளர் திருமலை ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment