கோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக வித்தியாசமாக நடத்திய இயக்குநர் கேவி ஆனந்த், இந்த விழாவில் தான் செய்ய மறந்த ஒரு செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் ட்விட்டரில்.
பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடந்தபோது, படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஏக மரியாதை. அவர் படம் பொறித்த டி சர்ட்டுகள் கூட வழங்கினார்கள்.
அதே போல பாடல் வெளியீட்டையும் விஐபி என குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்தி வெளியிடாமல், கீழே நின்று கொண்டிருந்த பத்திரிகை புகைப்படக்காரர்ளை மேடைக்கு ஏற்றி அவர்கள் கையால் வெளியிட்டார் ஆனந்த். தானும் ஒரு காலத்தில் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தவன்தான் என்பதை மறக்காமல் இந்த மரியாதையை அவர் செய்தார்.
இத்தனையும் செய்தவர், மறந்து போன விஷயம், படத்தின் பாடலாசிரியர்களை மேடையில் ஏற்றாததுதான். விழா முடிந்த பிறகுதான் இந்த விஷயம் ஆனந்துக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. ஹஸிலி பிஸிலி, ஒமகசீயா என்றெல்லாம் சொதப்பலாக, வக்கிரமாக அல்லது சொத்தையாக பாட்டு எழுதினாலும், பாடலாசிரியர்களாச்சே... விட்டுவிட முடியுமா? எனவே தனது மறதிக்கு வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்டும் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ளார் கேவி ஆனந்த்.
"கோ பட இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர்களை மேடைக்கு ஏற்ற மறந்துவிட்டேன். மறதியால் நடந்ததுதான் இது என்றாலும், என்னுடைய மிகப்பெரிய தவறாக இதைக் கருதுகிறேன். அதற்கான மன்னிப்பு கோருகிறேன்..." என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் ஆனந்த்.
No comments:
Post a Comment