இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக, இனிமேல் இதுபோல நடக்கக் கூடாது, நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறியுள்ளது.
தமிழக மீனவர் பாண்டியன் என்ற 19 வயது இளைஞரை இலங்கைக் கடற்படை ரவுடிக் கும்பல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. குருவியைப் போல சுட்டுக் கொன்ற இந்த சம்பவத்தால் தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கூறாத இந்திய அரசு மாறாக, இலங்கைக்கு அறிவுரைகளை அடுக்கியுள்ளது.
இதுதொடர்பாக இலங்கைப் பாதுகாப்புத்துறைக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒரு இடத்தில் கூட இந்த சம்பவத்தை கண்டிப்பதாக அவர் கூறவில்லை.
கிருஷ்ணாவின் கடிதத்தில் உள்ள விவரம்:
இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். நடந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தமும், கவலையையும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது நியாயமற்றது. எனவே படை பலத்தை பிரயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்துகிறது.
இந்தியா, இலங்கை இடையிலான கடல் பிரதேசத்தில் நமது மீனவர்களின் நலனும், பாதுகாப்பும் முக்கியமானது. அதற்கு இந்திய அரசு அதி உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.
படை பலத்தை பிரயோகிக்க வேண்டாம், சுட வேண்டாம் என்று தொடர்ந்து இலங்கைத் தரப்பிடம் இந்திய அரசு வலியுறுத்தியபடியே உள்ளது.
மேலும், 2008ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் நடக்குமாறும் கேட்டுக் கொண்டு வருகிறோம்.
மிகவும் குறைந்த அளவிலான எதிர்ப்பைக் காட்டுமாறும், படை பலத்தை பிரயோகிக்க வேண்டாம் என்றும் இலங்கை கடற்படையை கேட்டுக் கொள்கிறோம் என்று காலில் விழாத குறையாக கெஞ்சல் அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.
மேலும், இந்தியாவுக்கான இலங்கைத் தூதரையும் நேரில் வருமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்துள்ளதாம்.
இத்தனை காலமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் இந்திய அரசு இவ்வளவு வேகமாக கடிதம் எழுதியதில்லை. மாறாக, இலங்கையுடன் பேசுகிறோம் என்று மட்டுமே கூறுவது வழக்கம். ஆனால் தற்போதைய சம்பவத்தால் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில்தான் இந்தக் கடிதத்தையாவது அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment