நடிகை ஐஸ்வர்யா ராயைக் கெளரவிக்கும் வகையில் தான் புதிதாக உருவாக்கிய கொய்யாப் பழத்திற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளார் உ.பியைச் சேர்ந்த தோட்டக்கலை நிபுணரான ஹாஜி கலிமுல்லா கான் என்பவர்.
உ.பி. மாநிலத்தில் மாம்பழத்திற்குப் பெயர் போன மளிஹாபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா கான். இவர் உருவாக்கியுள்ள இந்த புதிய வகை கொய்யாப் பழம், ஆப்பிளைப் போல இருக்கிறது பார்ப்பதற்கு. ஆனால் ஒரு சாதாரண கொய்யாப் பழத்தில் இருக்கும் சுவையை விட அதில் அதிக சுவை உள்ளது. படு தித்திப்பாக இருக்கிறதாம்.
இந்த கொய்யாப் பழத்திற்கு ஐஸ்வர்யாவின் பெயரைச் சூட்டியுள்ளார் கான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மற்ற கொய்யாப் பழங்களை விட இது வித்தியாசமானு. பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். வழக்கமான கொய்யாப் பழங்களை விட அதிக சுவையானது. இதன் விதைகள் மிகவும் மென்மையானவை.
இந்த வித்தியாசமான கொய்யாப் பழத்தை உருவாக்க எனக்கு எட்டு ஆண்டுகள் பிடித்தது. இதை எந்தவகையான உரமோ அல்லது பூச்சிக் கொல்லியோ பயன்படுத்தாமல் வளர்த்தேன். ரசாயாண பூச்சிக் கொல்லிகளுக்குப் பதில் சாதாரண வேப்ப எண்ணையைத்தான் நான் பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தினேன் என்கிறார்.
விரைவில் இந்த ஐஸ்வர்யா கொய்யாப் பழத்தை விற்பனைக்கு விடப் போகிறாராம் கலிமுல்லா கான்.
கலிமுல்லா கான் உருவாக்கியுள்ள இந்த கொய்யா மரம் ஆண்டு முழுவதும் பழங்களைக் கொடுக்குமாம். மேலும், 3.7 அடி உயரமுள்ள ஒரு மாரத்திலிருந்து 72 பழங்களைப் பெற முடியுமாம்.
கலிமுல்லா கான் வித்தியாசமான தோட்டக்கலை நிபுணர் ஆவார். விதம் விதமான மாம்பழங்களை இவர் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் புதிய வகை மாம்பழத்தை உருவாக்கி அதற்கு சச்சின் டெண்டுல்கர் பெயரிட்டார்.
கலிமுல்லா கானுக்கு வயது 70 ஆகிறது. இவர் அறிவியல் பூர்வமாக தோட்டக்கலையில் நிபுணத்துவம் பெறவில்லை. மாறாக 7வது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக தோட்டக்கலையில் நிபுணத்துவம் பெற்றதாகும். அந்த வகையில் கலிமுல்லாவும் தோட்டக்கலையில் நிறைந்த தொழில்நுட்ப அறிவுடன் திகழ்கிகிறார்.
ஒரே மரத்தில், பல்வேறு அளவுகளில், 300 வகையான மாம்பழங்களை வளர்த்து சாதனையும் படைத்தவர் கலிமுல்லா கான். இதைப் பாராட்டி, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மரம் 100 ஆண்டு பழமையானதாகும். பல்வேறு உத்திகளை புகுத்தி இந்த சாதனை மாம்பழ வளர்ப்பை உருவாக்கினார் கலிமுல்லா கான்.
No comments:
Post a Comment