மைசூர் மாவட்டம் நஞ்சன் கூடு தாலுகாவில் சுத்தூர் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி தேசிகேந்திர சுவாமி தலைமை பொறுப்பு ஏற்று 25 ஆண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று அங்கு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு சென்றார். அப்போது அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைப்படி சிறந்த முறையில் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பா.ஜனதா அரசின் இந்த வளர்ச்சி பணிகளை எதிர்க்கட்சிகளால் சகித்து கொள்ள முடியவில்லை. என்னை பதவியில் இருந்து இறக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாந்திரீகம் வைத்து என்னை கொன்று விட வேண்டும் என்ற சதி நடக்கிறது. நான் எனது வீட்டில் இருந்த விதானசவுதாவுக்கும், விதானசவுதாவில் இருந்து வீட்டுக்கும் சென்று திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை இல்லை. அந்த அளவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது.
என்னை உயிரோடு கொல்ல முயற்சிக்கிறார்கள். நான் கடவுள் மீது பாரத்தை போட்டு எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். இதுபோன்ற சதிகளுக்கு நான் பயப்பட மாட்டேன். புறமுதுகு காட்டி ஓடிவிட மாட்டேன். இன்னும் 21/2 ஆண்டு காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்வேன்.இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, அப்படியானால் உங்களுக்கு கொலை மிரட்டல் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த எடிïரப்பா, இந்த சதியை பின்னர் வேறு எப்படி கூற முடியும்? என்றார்.
மாந்திரீகம் வைத்து கொல்ல முயற்சி செய்வது யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த எடிïரப்பா, "இதுபற்றி மக்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். நீங்கள் சொல்வதை போல யார் என்பதை நான் சொல்ல முடியாது. யார் சதி செய்கிறார்கள் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்'' என்றார்.
கவர்னர் பரத்வாஜ் எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் எடிïரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறும்போது, "என் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கக்கூடாது என்று மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதுபற்றி கருத்து தெரிவித்த கவர்னர் இது திருடன் போலீசுக்கு அறிவுரை வழங்குவதுபோல் உள்ளது என்று கூறியதன் மூலம் என்னையும், 6 கோடி கர்நாடக மக்களையும் அவமதித்து உள்ளார். கவர்னரின் இந்த கருத்து பற்றி நான் பிரதம மந்திரியிடம் புகார் செய்வேன். இது தொடர்பாக விரைவில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுத இருக்கிறேன்'' என்றார்.
நில முறைகேடு புகார் தொடர்பாக எடியூரப்பா பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதாவை சேர்ந்த சத்ருகன் சின்கா கருத்து கூறி இருப்பது பற்றி கேட்டபோது, "அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை'' என்று கூறிய எடிïரப்பா, "கட்சியின் தலைமை எனக்கு ஆதரவு அளித்து வருகிறது. என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லிக்கொள்கிறேன்'' என்றார்.
No comments:
Post a Comment