ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே நடந்த தேர்தல் மோதல் தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி. ரித்திஷ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நடிகர் வடிவேலு நேற்று மதியம் சிறையில் ரித்திஷ் எம்.பி.யை பார்த்து நலம் விசாரித்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் கருணாநிதியின் நலத்திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. சொன்னதையும் செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். நான் ஏழையாக இருந்து கஷ்டப்பட்டவன். ஏழைகளின் கஷ்டம் எனக்கு புரியும். போர்ப்படை தளபதிகளாக அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்கள்.
வலுவான கூட்டணியால் தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 58 வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழை மாணவர்களுக்கு லேப்-டாப், ஓட்டுரிமையில்லா சிசுக்களுக்கு மாதம் ரூ.1,000 (கர்ப்பிணி பெண்களுக்கு உதவி) இப்படி எண்ணற்ற திட்டங்களை சொல்லலாம்.
மதுரையில் இருக்கும் என்னுடைய தாயாரை சந்தித்து, அவரிடம் திருநீறு வாங்குவதற்காக வந்தேன். ஏப்ரல் 1-ந் தேதி முதல் தென்மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொந்த, பந்தங்களிடம் பிரசாரம் செய்வேன். திருவாரூரில் பிரசாரம் செய்யும்போது, விஜயகாந்த் பற்றி நான் தப்பா எதுவும் பேசவில்லை.
ஆனால் தப்பு, தப்பா பீல் பண்றாங்க என்ன பண்றது. விஜயகாந்த் தனது வேட்பாளரை போட்டு அடிக்கிறார். அவருக்கு தலைவராகும் தகுதியில்லை. அந்த கட்சியில் உள்ள தொண்டர்கள் நல்லவர்கள். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கோஷம் போடுபவர்களுக்கு கூட, அவரது இலவச திட்டங்கள் போய்ச் சேருகின்றன.
நான் எந்த மிரட்டலுக்கும் பயப்படமாட்டேன். என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள். சினிமா வாய்ப்பு இல்லாத விஜயகாந்த் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது பக்கத்து வீட்டில் இருந்தபோது, அவரை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்கச் சொன்னார்கள். அதற்கு மறுத்ததால் என்னை சிலர் தாக்கினர்.
இந்த பிரச்சினைக்கு விஜயகாந்த் தீர்வு காண முடியவில்லை. நாட்டு பிரச்சினைகளை இவர் எப்படி தீர்க்க முடியும்? இவரை தவறாக கூட்டணியில் சேர்த்து விட்டனர்.
இவ்வாறு நடிகர் வடிவேலு கூறினார்.
No comments:
Post a Comment