பாமக நிறுவனர் ராமதாஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு விஜயகாந்த் பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு விஜயகாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர், ‘’இதே போல் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தால் அப்புறம் பிரச்சாரம் முடிந்து ஊர் திரும்ப முடியாது. அவர் ஒழுங்காக ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு செல்ல வேண்டுமானால் இனி இப்படி பேசக்கூடாது’’ என்று எச்சரித்தார்.
இந்நிலையில் ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெருமாளை ஆதரித்து, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’பா.ம.க., காடுவெட்டி குரு நிறைய பேசுகிறார். பூச்சாண்டி காட்டினால் வேறமாறி போகிடும். அவர் சொன்னதை நானும் சொன்னால் தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடக்காது’’ என்று பேசினார்.
அவர் மேலும், ‘’ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், அவிநாசி-அத்திகடவு குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டு திட்டங்களை நிறைவேற்றவில்லை.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு வழங்கியதா சொல்றாங்க. அதனால் அவங்களுக்கு தான் ஆண்டுக்கு 3200 கோடி வருமானம் கிடைக்கிறது.
எதிர்கட்சிகள் காசு கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டு இருப்பதாக கருணாநிதி சொல்லியிருக்கிறார். கருணாநிதிதான் திருட்டுதனம் பண்ணுவார். இந்த ஊரை சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நேர்மையான அரசியல்வாதி.
காவிரி நதிநீர் பிரச்சனைக்காக தனது பதவியையே தூக்கி எறிந்தவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் குடும்பம் கஷ்டப்படுகிறது. அவர்களுக்கு நான் என்ன செய்வேன் என்பதை தேர்தலுக்கு பின் சொல்கிறேன்.
நான் வந்தால் எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி கொடுக்க சமச்சீர் கல்வி தருவேன். மீண்டும் இவங்களே ஆட்சிக்கு வந்தால் ஏற்காடு மலையையே விற்றுவிடுவார்கள். எனவே சிந்தித்து ஓட்டு போடுங்கள்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment