தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதால், அக்கட்சிகளில் அதிருப்தி சுழல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள வித்தியாசமான போக்கால், கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. "போட்டி வேட்பாளர்கள் இருப்பது, வளர்த்து விட்ட கட்சியை கழுத்தறுப்பது போல உள்ளது' என, முதல்வர் கருணாநிதி வெளிப்படையாக வேதனை தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. அடுத்த மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பிரசாரம் முடிவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., அணிகளில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, போட்டி வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். திருவிடைமருதூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கோவி.செழியனுக்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அரசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் 11 தொகுதிகளில், போட்டி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மயிலாப்பூரில் தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு எதிராக, தென்சென்னை மாவட்ட மகளிர் அணி செயலர் சிவகாமி நிறுத்தப்பட்டுள்ளார்.
வேலூரில் ஞானசேகரனுக்கு எதிராக வாலாஜா அசேன், சோளிங்கரில் அருள் அன்பரசுக்கு எதிராக முனிரத்தினம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.,க் கள் சுடலையாண்டியும், ராணி வெங்கடேசனும் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் மத்திய அமைச்சர் வாசனை, அவரது அலுவலகத்தில் அருள் அன்பரசு நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தனக்கு எதிராக போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ., முனிரத்தினத்தை வாபஸ் பெற வையுங்கள் என கேட்டுக் கொண்டார். ஓசூர் தொகுதியில் தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி சேர்மன் சத்யா, தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது யூசுப்புக்கு எதிராக, தி.மு.க.,வைச் சேர்ந்த சந்திரசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலிக்கு எதிராக, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹசீனா சையத் முதலில் அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும், மக்பூல் ஜான் அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் மனு தாக்கல் செய்யவில்லை. ஹசீனாவுக்கு எதிராக எட்டு பேர் போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்துள்ளனர். அதிகாரப்பூர்வமான வேட்பாளர் யார் என்ற குழப்பமும் அக்கட்சியில் நீடிக்கிறது.
இந்நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க.,விலும் போட்டி வேட்பாளர்கள் இருப்பது, வளர்த்து விட்ட கட்சியின் கழுத்தை அறுப்பது போல உள்ளது' என வேதனையுடன் கூறியுள்ளார். அதேபோல், அ.தி.மு.க.,விலும் சில தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். குளச்சல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லீமா ரோஸ் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக, சிட்டிங் எம்.எல்.ஏ., ஜான் ஜோசப் போட்டியிடுகிறார். இப்படி எல்லா கட்சிகளிலும் போட்டி வேட்பாளர்கள் களத்தில் குதிப்பதால், அதிருப்தி சுழல் உருவாகியுள்ளது. இந்த சுழலில் சிக்கி யார் யாரெல்லாம் பலியாகப் போகின்றனர் என்ற பதட்டம் வேட்பாளர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
மேலும் தி.மு.க., - அ.தி.மு.க.,வின் இலவச வாக்குறுதிகள், வாக்காளர்களை அதிர வைக்கிறது. இது போன்ற வித்தியாசமான போக்கு, இதற்கு முந்தைய தேர்தல்களை விட தற்போது அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால், கட்சித் தலைமைகளும் கலக்கமடைந்துள்ளன. ஆனால், ஒரு திருப்பமாக, திருப்பூரில் அதிக வேட்பாளர் போட்டியிடும் நிலை மாறிவிட்டது. அதே சமயம், தேர்தல் கமிஷன் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. இன்னும் ஓட்டுப்பதிவுக்கு 16 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை தமிழகம் சந்தித்திராத பல்வேறு அம்சங்கள் இத்தேர்தலில் தலை தூக்கியுள்ளன.
No comments:
Post a Comment