கடந்த ஒரு வருடமாக தமிழகம் சந்தித்த பரபரப்பான சம்பவங்களை ஒன்று சேர்த்து, அதில் தனது கற்பனையையும், கோபத்தையும் கலந்து திரைக்கதை அமைத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம் 'சட்டப்படி குற்றம்'.
இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி பணத்திற்காக தனது வெற்றியையே மற்றொரு அரசியல்வாதிக்கு தாரைவார்த்து கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் அந்த தொகுதியின் மக்களில் ஒருவராகிய விக்ராந்த், அந்த அரசியல்வாதியையும், அவருடைய அல்லகையையும் வெட்டி கொன்றுவிட்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாகிறார். காவல்துறை அதிகாரியின் பெண்ணை காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், காவல்துறை அதிகாரியின் சூழ்ச்சியால் போதை பழக்கத்திற்கு ஆளாகி தன்னையே மறக்கும் நிலையில் சுற்றி வருகிறார். படித்து விட்டு வேலைக்காக முயற்சிக்கும் பானு, ஆசி பெற ஆஷிரம சாமியாரை நாடி சென்று தனது கற்பை பறிகொடுக்கிறார். இப்படி பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, ஒன்று சேர்த்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார் முன்னால் காவல்துறை அதிகாரியும், இவர்களைப் போல அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவருமான சத்யராஜ்.
இவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுத்து போரளிகளாக மாற்றும் சத்யராஜ், பத்து நீதிபதிகள், பத்து காவல்துறை உயர் அதிகாரிகள், பத்து கலெக்டர்கள் என பல்வேறு துறைகளில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை கடத்தி வருகிறார். சமூகத்தில் இப்படி குற்றங்கள் நடைபெற காரணமானவர்களை தப்பிக்க வைப்பது உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள்தான் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார் சத்யராஜ், நாங்கள் வெறும் அதிகாரிகள்தான், அதிகாரம் என்னவோ அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. என்று தங்களின் நியாயத்தை கூறும் அரசு அதிகாரிகளுக்கு, நான் இருக்கிறேன். எனது இயக்கத்தின் இளைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். நீங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். இதுதான் எனது வேண்டுகோள். அதற்காகத்தான் நான் உங்களை கடத்திவந்தேன் என்று சத்யராஜ் கூற, ஆரம்பமாகிறது அரசு அதிகாரிகளின் அதிரடி.
ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யும் காவல்துறை, அந்த அரசியல்வாதிக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் நீதித்துறை, கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் பணத்தை ஒப்படைப்பது என பரபரப்பான காட்சிகள் அரங்கேற, அதே சமயம் இதற்கு காரணமான சத்யராஜ் மற்றும் அவருடைய இயக்கத்தை ஒழிக்க வில்லன் வெங்கடேஷின் சூழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேற, இறுதியில் நாம் எதிர்பார்த்த அதே க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம்.
அரத பழசான தனது லாயர் கோட்டுக்கு மீண்டும் ஒரு முறை சோப்பு போட்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்படியே பிஸ்டலையும் தூக்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறார். அதைக் கொண்டு கான்டா மிருகங்களுக்கு குறி வைத்திருக்கிறார் என்று நினைத்தால், கரப்பான் பூச்சிகளை சுட்டுத் தள்ளியிருக்கிறார்!
அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார். அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குள்ச் செல்லு காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர்.
தூக்கு தண்டனை கைதியான விக்ராந்த்தை ஜெயில் சுவற்றை மோதி உடைத்துக் ஜீப்பில் காப்பாற்றிக் கொண்டு போகிறார் காட்டில் புரட்சிப்படை நடத்தி வரும் சத்யராஜ். (ஜீப்பின் முன் பக்கம் நெளிய வேண்டாம். அட்லீஸ்ட் ஹெட் லைட்டுகளுக்காவது சேதம் வருமல்லவா, அது கூட இல்லை. இப்ப புரிஞ்சுருக்குமே இந்த படத்திற்கும் லாஜிக்குக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று) அங்கே இவரைப் போலவே ஏராளமான இளைஞர்கள், இளைஞிகள். எல்லாருமே சமுகத்தின் ஏதாவதொரு பெருச்சாளியால் கடிபட்டவர்கள். சீனுக்கு சீன் பெரிய சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு அவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறார் சத்யராஜ்.(அரசாங்கத்தை எதிர்க்கிறோம் என்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த நல்ல திட்டங்களையும் எதிர்ப்பதா! புகை பிடிப்பதை போன்ற காட்சிகளை திரைப்படங்களில் வைப்பதும் 'சட்டப்படி குற்றம்' தான்)
நாட்டுக்குள்ளிருந்து நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை காட்டுக்குள் கடத்திக் கொண்டு போகும் புரட்சிப்படை கும்பலும் தலைவர் சத்யராஜும், ஏன் தவறுக்கு துணை போறீங்க என்று அவர்களை கேட்பதுடன், நாங்க கேக்கறது தப்புன்னா எங்களை சுட்டு தள்ளிட்டு நீங்க தப்பிச்சு போகலாம் என்று துப்பாக்கியை அவர்கள் வசமே ஒப்படைக்கிறார்கள். அப்புறம் என்ன? நாட்டுக்கு திரும்பி வரும் 'நல்லவர்கள்' நீதி தவறாமல் முடிவெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளிடமிருந்து கருப்பு பணம் கைப்பற்றப்படுகிறது. ரவுடிகள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். இறுதியில் எல்லாம் சுபமஸ்து! கருப்பு பணம் மக்களுக்கே திரும்பி வருகிறது, அதுவும் அவரவர் வீடு தேடி!
கொடுத்த வேலையை கெடுக்காமல் செய்திருக்கிறார் சத்யராஜ். அதற்காக 'பத்து பேர் பலியானான், நூறு பேர் புலியானான்' என்ற கம்பீர வார்த்தைகளை சம்பந்தமில்லாமல் இந்த படத்தில் வைத்து... (என்னவோ போங்க சார்) இவருடன் விக்ராந்த், ஹரிஸ் கல்யாண், வசந்த், தாமிரபரணி பானு, சுரேஷ், லிவிங்ஸ்டன், ராதாரவி போன்ற பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. விரிவாக பேசுவதற்கு அவசியமில்லை. சீமானின் வசனங்களில் மட்டும் அப்படியே அப்பட்டமான ஸ்பெக்ட்ரம் வாசனை. அதுவும் அந்த முன்னாள் மினிஸ்டரை நேரடியாகவே தாக்கி துவம்சமாக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.
காட்டுக்குள்ளிருக்கும் புரட்சி போராளிகள், நாட்டுக்குள் வந்து அதிகாரிகள் நேர்மையாக பணிசெய்ய துணை நிற்கும் காட்சிகள் மட்டும் புதுசு. அதற்காக ஒருமுறை வஞ்சகமில்லாமல் பாராட்டலாம் இயக்குனரை. திட்டுகிற வரைக்கும் திட்டி தீர்த்துவிட்டு பெரியவர் நல்லவர்தான். அவரு பேரை ஏன்யா கெடுக்கிறீங்க என்பது மாதிரி 'ஜர்க்' அடித்திருப்பதுதான் பல்டி நம்பர் ஒன்! (இதுக்கு படமெடுக்காம பேசாமல் சும்மா இருந்திருக்கலாம் விஜயோட பேராவது கெடாமல் இருந்து இருக்கும் )
விஜய் ஆன்ட்டனி இந்த படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லியிருந்தார் எஸ்.ஏ.சி. சொல்லவே வேண்டாம். புரிகிறது. அவரையும் மீறி ரசிக்க வைத்திருக்கிறது ராத்திரி நேரத்து பூஜையில் ரிமிக்ஸ். அவருக்கு திருக்குறளை பிடிக்கும். ஏன்னா அதிலே அதிகாரம் இருக்கே. வசன உபயம் வி.பிரபாகர். பொறி பறக்குது பாஸ்...
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டியிருக்கார் இயக்குனர்
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment