தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். நேற்று இரவு சேலத்தில் பிரசாரம் செய்தபோது விஜயகாந்த் பேசியதாவது:-
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் வாக்காளர்களாகிய உங்களை கேட்டுக் கொள்கிறேன். அந்த கூட்டணி, மக்களுக்கு குறிப்பாக பணத்தை கொடுத்து நாட்டையே கெடுக்கும் கூட்டணியாகும். இந்த தேர்தலில் போலீசார் எந்த அணிக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பெரும்பாலான அதிகாரிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஒரு சில அதிகாரிகள் ஒரு சில போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்கள் பெயர் விவரங்களை பட்டியல் எடுத்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க உள்ளேன்.
நான் (விஜயகாந்த்) இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளதை குறைகூறு கிறார்கள். அ.தி.மு.க. என்னுடைய மான சீக குருவான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அந்த கட்சியுடன் தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். சுய நலவாதிகளிடம் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன்.கடந்த 5 ஆண்டுகளில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைதான் காணப்பட்டது.
இந்த கூட்டணிக்கு நீங்கள் மீண்டும் வாக்களிக்காதீர்கள். இந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சேலத்தையே விற்று விடுவார்கள்.காங்கிரஸ் கட்சிக்கு தமிழ் நாட்டின் மீது அக்கறை கிடையாது. அவர்களுடைய அக்கறை எல்லாம் டெல்லி ஆட்சியைப்பற்றிதான். அவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி மட்டுமல்ல தமிழக மக்களைப்பற்றியும் அக்கறை கிடையாது.ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதைப் பற்றி கவலைப்படாதவர்கள் தான் அவர்கள்.
இதையெல்லாம் சிந்தித்து பார்த்து நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவர்களுடைய ஆட்சியில் தான் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 60 ரூபாய்க்கும் அதி கமாக உயர்ந்துவிட்டது. இதனால் நடுத்தர மக்கள், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதைப்பற்றியெல்லாம் காங்கிரசுக்கும், தி.மு.க. வுக்கும் எந்த அக்கறையும் கிடையாது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment