சென்னை விருகம்பாக்கம் பள்ளிக்கூட மெயின் ரோட்டில் வசித்து வரும் ஜெயந்தி (45). ரிஷிவந்தியம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இவரை 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றது. இதை அவரது கணவர் மூர்த்தி தடுத்தார். அப்போது அவரது வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், ரிஷிவந்தியம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சிவராஜ் தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல் நடந்ததாக கூறியிருந்தார்.
இதையடுத்து சிவராஜ் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுயேச்சையாக போட்டியிட மனு செய்த ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மூர்த்தி, மகன் சத்திய நாராயணா ஆகியோருடன் வந்த ஜெயந்தி புகார் மனு கொடுத்தார்.
அதில் அவர், ‘’எனது கணவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். மேலும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment