மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, குறைபாடுகள் உள்ள வேட்பு மனுவை தங்கபாலுவும், அவரது மனைவியும் திட்டமிட்டே தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயந்தி தாக்கல் செய்த வேட்பு மனு குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்துள்ளார். இதற்கு பதிலாக, ஜெயந்திக்கு, "டம்மி' வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனுவை, தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் தங்கபாலு, மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே, மனைவியின் வேட்பு மனுவில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை என்று தங்கபாலு மீது, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். மனைவி பெயரில் தாக்கல் செய்துள்ள மனுவை அரைகுறையாக தாக்கல் செய்துவிட்டு, மாற்று வேட்பாளராக தன் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சரியாக தாக்கல் செய்துள்ளார். மாநில அரசியலுக்குள் நுழைய, பின் வழியை தங்கபாலு பயன்படுத்தியுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
"சட்டசபை தேர்தலில், போட்டியிட நேரடியாக கட்சித் தலைமையிடம், "சீட்' கேட்டபோது, "மாநிலத் தலைவராக இருப்பவர் ஒரு தொகுதியில் முடங்கி விடக்கூடாது; மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டும்' எனக் கூறி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அகில இந்திய தலைமையை ஏமாற்றும் வகையில் தங்கபாலு செயல்பட்டுள்ளதாக, கூட்டணிக் கட்சிகளில் சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரசைப் பொறுத்தவரை, கூட்டணி ஆட்சி என்பதில் தெளிவாக உள்ளது. இது போன்ற சூழல் ஏற்படும் போது, மந்திரி சபையில் காங்கிரஸ் கட்டாயமாக பங்கேற்கும். அப்போது, தான் எம்.எல்.ஏ.,வாக இருக்க வேண்டும் என்பதற்காக, தங்கபாலு களத்தில் நுழைந்துள்ளார் என்றும் கூட்டணி கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.
No comments:
Post a Comment