நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிதானத்துடன் பேச வேண்டும் என்றும், ஜெ. குரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்றைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வ செயல்திறனை தனது திரைப்படத்தால் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று பாழடித்த விஜயகாந்த், பாமக இளைஞர்களையும், மக்களையும் மரம் நடச் சொல்வதை விமர்சிப்பது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. நிதானம் இல்லாத போக்கையும் காட்டுகிறது.
மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று இவர் சுயநினைவோடு பேசியிருந்தால், சட்டசபைக்கு நிதானமின்றி வருகிறார் என்று கூறிய ஒருவரோடு கூட்டு சேர்ந்திருப்பாரா? நிதானம் தவறி கூட்டு சேர்ந்த இவருக்கு, பாமக கூட்டணி சேர்ந்தது பற்றி வர்ணிக்க எந்த தகுதியும் கிடையாது.
போராட்டம், சிறைவாசம் என்று தியாக தழும்பேறிய தமிழ் சமுதாயத் தலைவர்களை மயக்க நிலையிலேயே நிதானமின்றி பேசுவதை தமிழ் சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
அஸ்திவாரம் இல்லாத கூட்டணி மீது நின்று கொண்டு கூக்குரலிடும் இந்த மனிதரின் வரம்பு மீறிய பேச்சு, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை கொந்தளிக்க செய்துள்ளது. தேர்தல் களத்திலே உள்ள நமது இளைஞர்களின் கவனம் தேர்தல் பரப்புரையிலும், நமது வெற்றியிலும்தான் இருக்க வேண்டும். '.குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு' என்ற சொல்லுக்கு உதாரணமாய் விளங்கும் இத்தகைய நபரின் பேச்சால் கவனம் திரை திரும்பி விட வேண்டாம்.
விருத்தாசலம் வாக்காளர்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். ஆனால் ரிஷிவந்தியம் மக்கள் ஏமாற மாட்டார்கள். தங்களையும், தங்களின் உரிமை போராட்டத்தையும் இழிவுப்படுத்தி பேசிய நடிகருக்கு பாடம் புகட்ட இந்த பின்தங்கிய மக்கள் தயாராகிவிட்டனர். இனியாவது நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நிதானத்துடன் பேச வேண்டும். இதனை இந்த மக்களின் சார்பில் எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு ஜெ. குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment