நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை நலம்பெற வேண்டி நடிகர் மற்றும் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன்.
உடல்நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் மேலும், ‘’சூப்பர்ஸ்டாராக பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்து பேரும் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு உடல்நலமில்லை என்பதை அறிந்து துடிதுடித்துப்போய்விட்டேன்.
என்னை சினிமாவுக்கு கொண்டு வந்ததே சூப்பர்ஸ்டார்தான்.
அவரைப் போலவே தீவிர ராகவேந்திரர் பக்தனான நான், ராகவேந்திரருக்காக திருக்கோவில் கட்ட தீர்மானித்தபோது, சிலை வடிவமைக்க மாதிரி புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, இதுபோல் சிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது எண்ணப்படியே சிலையை வடித்து ஆவடியில் ராகவேந்திரருக்கு திருக்கோவிலை நிர்மாணித்தோம்.
ரஜினி எண்ணப்படி கட்டப்பட்ட ராகவேந்திரர் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 அன்று காலை 6.30 மணிக்கு, ரஜினி உடல்நலம் பெற வேண்டி, 108 குடம் பாலாபிஷேகம் செய்து, கூட்டுப்பிரார்த்தனை செய்ய இருக்கிறோம்.
ரஜினி உடல்நலத்துக்காக நடைபெற உள்ள இந்த கூட்டுப்பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டு இந்த கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பிரார்த்தனை செய்யவும்.
கோடானுகோடி மக்களின் சார்பாக கடவுளின் முன் வைக்கப்படும் நம் கோரிக்கை ஏற்று நிச்சயம் கடவுள் அருள் புரிவார். ரஜினி நலம் பெறுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment