ஆசனவாயில் பதுக்கிய ஆணுறையில் தங்க பிஸ்கெட் கடத்திவந்த வாலிபர் பிடிபட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொழும்பில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானத்தில் தங்க பிஸ்கெட் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் பன்னாட்டு விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். கொழும்புவில் இருந்து வந்த ஒரு விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதித்தனர்.
அப்போது ஒரு வாலிபர் வித்தியாசமாக நடந்துவந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவரை விமான நிலையத்தில் உள்ள தனி அறைக்கு கொண்டு சென்று சோதித்தனர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி.பட்டினத்தை சேர்ந்த சையத் முகமது (35) என்பதும் சுற்றுலா விசாவில் கொழும்பு சென்று வந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, அவரை ஸ்கேன் செய்து பார்த்தனர். அவரது ஆசனவாயில் கருப்பு டேப் சுற்றப்பட்ட பை இருந்தது. டாக்டரை வரவைத்து ஆசனவாயில் இருந்த பையை எடுத்தனர். பைக்குள் இருந்த ஆணுறையில் 5 தங்க பிஸ்கெட்டுகள் இருந்தன. ஒவ்வொரு பிஸ்கட்டும் 100 கிராம் இருந்தது. ரூ.12 லட்சம் மதிப்பு கொண்ட அரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்பிறகு சையத் முகமதுவை விசாரிக்க மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

No comments:
Post a Comment