ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா கைவிடப்பட்டதாக வரும் செய்திகளில் உண்மையில்லை, என படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
ராணா பட பூஜை கடந்த ஏப்ரல் 29-ம்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. ரஜினியும் தீபிகா படுகோனேயும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போதுதான் ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ராணா படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா? என்று கேள்விக்குறி எழுந்தது.
படம் கைவிடப்பட்டதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரூ.100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் ஈராஸ் நிறுவனம் உருவாக்கவிருந்த படம் இது. எனவே ராணா படம் கைவிடப்பட்டதா? என்று அப்படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்டபோது, அதை உடனடியாக மறுத்தார்.
அவர் கூறுகையில், "ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளிப் போடவும் இல்லை. படத்தை கைவிட்டு விட்டதாக வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம். இதுவரை தீபிகா மற்றும் வேறு நடிகர்கள் தொடர்புடைய காட்சிகளை எடுத்து வந்தோம். ஜூலையில்தான் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறோம். தற்போது அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
தாய்லாந்து சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளேன். அடுத்து லண்டன் செல்ல இருக்கிறேன். படத்தை கைவிட்டு விட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. அதை நம்ப வேண்டாம். குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கும்," என்றார்.
ரஜினி குடும்பத்தினர் இந்தப் படம் குறித்துக் கூறுகையில், "இப்போதைக்கு ரஜினி உடல்நிலைதான் முக்கியம். அது சரியானபிறகு ராணா தொடங்கும்", என்றனர்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment