இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சிக்கு கொள்கை என்ன என்று சிலர் கேட்கிறார்கள். விஜயகாந்த் கட்சியின் கொள்கையை பார்த்துதான் ஓட்டு போட்டார்களா? ஊழல் ஓழிக்கப்பட வேண்டும். ஜாதிகள் ஒழிக்கப்பட்டு, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற நிலை வர வேண்டும். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கு நான் தலைவரா என்று கேட்கிறார்கள். நாளைய தலைவர்களை உருவாக்குகிற முதல் கட்ட தொண்டன் நான். நாம் தமிழர் கட்சிக்கு என்றுமே அண்ணன் பிரபாகரன் தான் தலைவர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு சீமான் காரணம் என்று நான் சொல்லவில்லை. அறிவாளர்கள் சொல்கிறார்கள். பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்லியிருக்கிறார். கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் முக்கிய காரணம் என்றார்.

No comments:
Post a Comment