58வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகை விருதை சரண்யா பொன்வண்ணன் வென்று உள்ளார்.
தேசிய விருது வென்று இருப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் " இதை என்னால் நம்பமுடியவில்லை. பொதுவாக திரையுலகில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அந்த கதாபாத்திரத்தை அமைத்து இருந்தார். அவருக்கு என் நன்றி. படத்தை தயாரித்த கேப்டன் ஐசக்குக்கும் நன்றி.
இது கடவுளுடைய செயலாகவே தெரிகிறது. கடந்த ஒரு மாதமாக என் கணவர் உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறி வந்தார். எனது கணவரின் கனவு சொல் பலித்து விட்டது." என்று கூறியுள்ளார்.
'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இடம் பெற்ற முதல் பாடலான 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' என்ற பாடலுக்காக 6-வது முறையாக தேசிய விருது பெறுகிறார் கவிஞர் வைரமுத்து.
தேசிய விருது 6வது முறையாக வென்று இருப்பது கூறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் " மெட்டு போட்டு எழுதிய பாடல் இது. இயக்குனர் சீனு ராமசாமி உயிர்த்துடிப்பாக இயக்கி இருந்தார்.
கேப்டன் ஐசக் துணிச்சலாக இந்த படத்தை தயாரித்து இருந்தார். புதிய இசையமைப்பாளரான ரகு நந்தன் சிறப்பாக இசை அமைத்து இருந்தார். தமிழ்படங்களில் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தாய்மார்களின் கதைகளையே அதிகமாக படமாக்கி இருக்கிறார்கள். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒரு உழைக்கிற தாயின் கதையை படமாக்கி இருந்தார்கள்.
படிப்பறிவு இல்லாத தாய் படும் துயரத்தை ஒப்பனை இல்லாமல் மிக யதார்த்தமாக படம் பிடித்து இருந்தார்கள். அதுபுரிந்து கொள்ளப்பட்டதில் மகிழ்ச்சி. படிப்பறிவு இல்லாத தாய்மார்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குகிறேன்.
இந்த ஆண்டில் தமிழ் திரையுலகம் நிறைய விருதுகளை வாங்கி தலைநிமிர்ந்து நிற்பது பெருமையாக இருக்கிறது. என்னுடன் விருது பெறும் எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். மூத்த கலைஞர் டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் இளைய கலைஞர்களுடன் நானும் விருது பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் இயக்குனரான சீனுராமசாமி அளித்துள்ள பேட்டியில் " தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக சிறந்த பாடலாசிரியர், சிறந்த மாநில மொழி திரைப்படம், சிறந்த நடிகை ஆகிய 3 விருதுகள் கிடைத்து உள்ளன.
30 வருடங்களுக்கு பின் இத்தனை விருதுகள் இப்போதுதான் கிடைத்து உள்ளது. விருதுபெறும் கவிஞர் வைரமுத்து, கதாநாயகி சரண்யா ஆகியோருக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு தாய்மையின் தியாகத்துக்கு கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். " என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment