2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் அவரது வீட்டில் முன்னாள் துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராச்சாமி மற்றும் தி.மு.க., முக்கியஸ்தர்கள் கலந்து அடுத்தது என்ன செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர். இன்று ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து கனிமொழியின் சி.ஐ.டி., காலனியில் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
ராஜாத்தி வீட்டிற்கு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி நிலைமைகளை கேட்டறிந்தார். ராஜாத்திக்கு ஆறுதல் கூறினார். டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். ராஜாத்தி இன்றோ , நாளையோ டில்லிக்கு புறப்பட்டு செல்வார் என தெரிகிறது. கருணாநிதி வீட்டில் இருந்தபோது சற்று உடல்நலம் குறைந்தது போல உணர்ந்ததாகவும் , குடும்ப டாக்டர் கோபால் அவரது உடல்நிலையை பரிசோதித்ததாகவும் தெரிகிறது. கருணாநிதி வீட்டில் இருந்து கிளம்பும் போது நிருபர்களிடம் பேசுவார் என நிருபர்கள் காத்து நிற்கின்றனர்.
இவரது கைது குறித்து முதல்வர் ஜெ., என்ன சொல்கிறார் என கேள்விகள் கேட்பதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் பத்திரிகையாளர்கள் குவிந்துள்ளனர்.
கருணாநிதி கருத்து: “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment