தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., படுதோல்வியை சந்தித்துள்ளதால், ராஜ்யசபா எம்.பி.,யாகி மத்திய அமைச்சராகும் அன்புமணியின் கனவு தகர்ந்துள்ளது. இதனால், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், சீட் எண்ணிக்கைக்காகவும், தி.மு.க.,வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்த பா.ம.க., அ.தி.மு.க., அணிக்கு மாறியது. தேர்தலில் ஏழு இடங்களில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. இனி, பா.ம.க., நிலை அவ்வளவுதான் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, தன் குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து, அ.தி.மு.க.,வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அ.தி.முக., கூட்டணியிலிருந்து குறுகிய காலத்திலேயே வெளியேறியது. பின், பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மீண்டும் இணைந்த பா.ம.க., 30 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடர் தோல்விகளால் பா.ம.க., தொண்டர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
தைலாபுரம் வட்டாரத்தில் உள்ளவர்களோ, பா.ம.க.,வின் தோல்வி மட்டுமின்றி, அன்புமணியின் ராஜ்யசபா மற்றும் மத்திய அமைச்சர் கனவும் தகர்ந்துள்ளதால் கூடுதல் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2004ல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்று, பின் தி.மு.க., கூட்டணியில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது "தி.மு.க., கூட்டணி சார்பில், 2014ல் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும்' என, கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால், ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க.,வுக்கே ஒரு ராஜ்சபா எம்.பி., பதவி கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி இல்லை என்பது உறுதியாகி விட்டதால், 2014ல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே எம்.பி.,யாக முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. அன்புமணியின் அரசியல் எதிர்காலம் அதுவரை கேள்விக்குறியாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

No comments:
Post a Comment