"தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தால், அதில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து, இப்போது எதுவும் சொல்ல முடியாது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் தங்கபாலு நேற்று சந்தித்து பேசினார். வெளியே வந்த தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் கருணாநிதி தலைமையிலான கூட்டணி தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக பணியாற்றியது. மத்திய மற்றும் மாநில அரசு வழங்கியுள்ள திட்டங்கள், தமிழக மக்களுக்கு மிகவும் திருப்திகரமான முறையில் செயலாக்கத்தில் உள்ளன. ஆகவே, தமிழகத்தில் வரும் தேர்தல் முடிவுகள், முதல்வர் தலைமையிலான மாநில அரசு ஆற்றி வரும் பணிகளுக்கும், சோனியா வழிகாட்டுதலின் பேரில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆற்றி வரும் பணிகளுக்கும் தமிழக மக்கள் சிறந்த வெற்றியை கொடுப்பர். அரசின் சாதனைகளுக்காக தமிழக மக்கள் ஓட்டளித்திருப்பது மிகச் சிறந்த பாக்கியம். தமிழக முதல்வர் ஆறாவது முறையாக முதல்வராகப் பதவியேற்பார். இவ்வாறு தங்கபாலு கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள், ""சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதே? தி.மு.க., தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் போது கூட்டணி அரசு அமைந்தால் காங்., கட்சி பங்கேற்குமா?'' என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு தங்கபாலு, ""எங்களுடைய முக்கியமான குறிக்கோள், தமிழகத்தில் மீண்டும் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பது தான். அதுதான் எங்களுடைய வேண்டுகோள். அதற்குத்தான் மக்கள் ஓட்டளித்திருக்கின்றனர். மற்ற விஷயங்களை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது,'' என்றார்.

No comments:
Post a Comment