மானநஷ்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கோர்ட் இறுதி கெடு விதித்துள்ளது. மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து வில்லன் நடிகர் திலகன் கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். அப்போது, சங்கத்தில் இருந்து நீக்கியதற்கு மம்முட்டியும், மோகன்லாலும்தான் காரணம் என்று திலகன் கடுமையாக விமர்சனம் செய்தார். மலையாள எழுத்தாளர் சுகுமார், திலகனுக்கு ஆதரவாக பேசினார். மோகன்லாலை ‘குங்குமம் சுமக்கும் கழுதை‘ என்றும், ‘ரஜினி போல் மோகன்லால் மேக்கப் இல்லாமல் வெளியே வரமுடியுமா‘ என்றும் சுகுமார் கடுமையாக தாக்கினார்.
இதற்கு பதில் அளி்த்து பேசிய மோகன்லால், சுகுமாருக்கு புத்தி பேதலித்து விட்டது என்று கூறினார். இதையடுத்து மோகன்லால் தன்னை அவமரியாதையாக பேசியதாக சுகுமார், திருச்சூர் கோர்ட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தபோதும் மோகன்லால் ஆஜராகவில்லை. இந்நிலையில் மோகன்லாலுக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது ஆஜரான மோகன்லால் வழக்கறிஞர், நடிகர் மோகன்லால் அபுதாபியில் படப்பிடிப்பில் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று காரணம் தெரிவித்தார். இதையடுத்து வரும் ஜூலை 22ம்தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அன்றையதினம் கண்டிப்பாக மோகன்லால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அதுதான் அவருக்கு கடைசி வாய்ப்பு, என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment