கமல்ஹாசன் நடிக்கும் `விஸ்வரூபம்' என்ற புதிய படத்தை செல்வராகவன் டைரக்ஷனில், டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது.
செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் `பிஸி'யாக இருப்பதால், `விஸ்வரூபம்' படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வருகிறது.
தனுஷ் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டார்.
அதுவரை கமல்ஹாசனை காத்திருக்க வைப்பதில், தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லாததால், `விஸ்வரூபம்' படத்தை கமல்ஹாசன் டைரக்ஷனில் தயாரிக்க முடிவு செய்தார். கமல்ஹாசனை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார்.
`விஸ்வரூபம்' படம் தாமதமாகிக்கொண்டே போவதை கருதியும், தயாரிப்பாளரின் பணம் விரயமாவதை தவிர்க்கவும் படத்தை இயக்குவதற்கு கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் கதை-திரைக்கதை-வசனம்-டைரக்ஷனில், `விஸ்வரூபம்' படம், ஜுன் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.
படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. `தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், `விஸ்வரூபம்' உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. `ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.
இளமை மிகுந்த புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை `ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை கவுதமி கவனிக்கிறார்.
கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் லீசான் ராய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசாக, வருகிற நவம்பர் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment