வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ரசிகர்களை சமாதானப்படுத்தவும் ரஜினிகாந்த் பேசுவது போன்ற வீடியோ படம், இன்னும் 3 நாட்களில் வர இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் மூச்சுக்குழாய் தொற்று மற்றும் குடல் நோயினால் கடந்த சில வாரங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்து, நுரையீரலில் இருந்த நீர்க்கோர்ப்பை அகற்றினார்கள். சிறுநீரகத்திலும் பாதிப்பு இருந்ததால், அவருக்கு `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.
இதற்காக, கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் தனி வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ரஜினிகாந்த் பற்றி பரபரப்பான வதந்திகள் பரவின.
ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வெளிïர்களில் இருந்து ரஜினி ரசிகர்கள் போரூர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தார்கள்.
தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடத்தினார்கள். பல ரசிகர்கள் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தார்கள். அக்கினி குண்டம் வளர்த்து தீ மிதித்தார்கள்.
நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டி, அவருடைய ரசிகர்கள் பாஸ்கர், போஸ், தாதா ஆகியோர் விசேஷ பிரார்த்தனை நடத்தி, 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட இயக்குனர்கள் 500 பேர்களும், உதவி இயக்குனர்கள் 1000 பேரும் சென்னையில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். இந்த கூட்டு பிரார்த்தனைக்கு டைரக்டர் பாரதிராஜா தலைமை தாங்கினார். டைரக்டர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு, நேற்று சென்னை வந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய குறிப்புகளை பார்த்தார்கள்.
அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து, ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ரஜினிகாந்த் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுவதால், அதை தவிர்க்கவும், ரசிகர்களை சமாதானப்படுத்தவும் ரஜினி பேசுவது போன்ற வீடியோ படத்தை வெளியிட அவர் குடும்பத்தினர் முடிவு செய்து இருக்கிறார்கள். இன்னும் மூன்று நாட்களில் அந்த வீடியோ படம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment