வெள்ளை மாளிகையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒபாமாவை கொல்ல நடந்த சதி என தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் மீது துப்பாக்கியால் சுடப்பட்டது. அதில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா தங்கியிருக்கும் குடியிருப்பின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
இதை தொடர்ந்து அப்பகுதியில் அனாதையாக நின்ற ஒரு காரில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக உளவுத்துறையினர் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், காரில் கிடந்த அடையாள அட்டை மூலம் வெள்ளை மாளிகை மீது துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் ஆஸ்கர் ஆர்டேகா-ஹெர்னான்டஸ் (21). பென்சில்வேனியாவில் உள்ள ஓட்டலில் பதுங்கி இருந்தபோது அவர் பிடிபட்டார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அவர் பிட்ஸ்பர்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 2 சாட்சிகளும் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, ஒபாமா ஒரு சாத்தான். கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர் என கைது செய்யப்பட்ட ஆர்டேகா-ஹெர்னான்டஸ் கூறியதாக சாட்சியாளர்கள் தெரிவித்தனர்.
எனவே, வெள்ளை மாளிகையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிபர் ஒபாமாவை கொல்ல நடந்த சதி என கருதப்படுகிறது. ஏனெனில் துப்பாக்கி குண்டு மஞ்சள் ஓவல் அறை ஜன்னலை தாக்கி உள்ளது. அது அதிபர் ஒபாமா குடும்பத்தினர் தங்கியிருக்கும் பகுதியில் உள்ளது. இச்சம்பவம் குறித்து உளவுத்துறை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆர்டேகா-ஹெர்னான்டசுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment