இப்போதெல்லாம் எந்த ஒரு செய்தியும் மக்களை சென்று அடைய விளம்பரம் ரொம்ப முக்கியம். அந்த வகையில், சினிமாவுக்கு விளம்பரம் என்பது எப்போதும் அவசியமானது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு அந்த தயாரிப்பு நிறுவனமோ, அல்லது அந்த படத்தை வெளியிடும் நிறுவனங்கள் கொடுக்கும் விளம்பரமே ரொம்ப ஜாஸ்தி. அதிலும் டி.வி., மூலமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளேயும் கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர். படங்கள் நல்லா இல்லையென்றால் விளம்பரம் மூலமாகவே அந்தபடம் ஹிட்டாகிவிடுகிறது. அதேசமயம் சிறிய பட்ஜெட் படங்களில் நல்ல கதையம்சம் இருந்தும், பத்திரிக்கைகளில் பாராட்டு பெற்றும், ஏதோ சில காரணங்களால் மக்களை சென்று சேர்வதில்லை.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட படங்கள் பத்திரிக்கைகளில் பாராட்டு பெற்றும், சமூகத்தின் அவலங்களையும், அறியாமையையும் சொல்லும் படமாக இருந்தும், அந்தபடங்கள் மக்களை போய் சேரவில்லை என்று அந்தபடங்களின் இயக்குநர்கள் ரொம்பவே வருத்தமும், வேதனையும் படுகிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற படங்கள் இந்தவாரம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதுபற்றி வெங்காயம் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் நம்மிடம் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி இருந்தேன். படத்தை பார்த்த இயக்குநர்கள் பாக்யராஜ், ரோகினி உள்ளிட்ட பலர் என்னை பாராட்டினார்கள். அவர்களும் இந்த மாதிரியான படங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்னு முயற்சி செய்தனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வெங்காயம் படத்தில் பல புது முகங்கள் நடித்திருந்தாலும், நிச்சயம் நிறைய பேரை அழ வைத்துள்ளது. மக்கள்கிட்ட நல்ல செய்தியை சொன்ன படம் வெங்காயம் என்பதில் சந்தோஷம். மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், மக்கள் விரும்பி பார்க்க வாய்ப்பு உள்ளது. விரைவில் இப்படத்தை தெலுங்கிலும் எடுக்க எண்ணம் உள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment