இன்றைக்கு பெரிய எழுத்தாளரைப் பற்றி கூட நிறைய பேருக்கு தெரிவதில்லை. உலகமறிந்த சூப்பர் ஸ்டாரான ரஜினி ஒரு இலக்கிய விழாவில் பங்கெடுத்து, எழுத்தாளர்களின் பணியைப் பற்றி பேசும்போது, அதற்கு கிடைக்கிற மரியாதையும் கவனமும்தான் மிக முக்கியம். அந்த வகையில் இலக்கிய உலகுக்கு ரஜினி மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார், என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
எஸ் ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி பங்கெடுத்ததை விமர்சித்து, நடிகரை வைத்து இலக்கியம் வளர்ப்பதா என சிலர் 'அரசியல்' பேசி வரும் நிலையில், ரஜினி பங்கேற்பு குறித்து பாஸிடிவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எஸ் ராமகிருஷ்ணன் விழாவில் ரஜினி பேசும்போது, "நான் எஸ்எஸ்எல்சிதான் படிச்சிருக்கேன். ஆனா வேற புத்தகங்கள் நிறைய படிச்சேன். அவைதான் இன்னிக்கு வரைக்கும் என் வாழ்க்கல ரொம்ப உதவியா இருக்கு. ...எழுத்தாளர்கள் கஷ்டப்படக் கூடாது. நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றதோடு, இளைஞர்களை புத்தகங்கள் வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொண்டார் ரஜினி.
புத்தகச் சந்தையில் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி, இது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நிலை தொடரணும், என்றார் ரஜினி.
"ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமை கொண்ட ரஜினி இப்படிப் பேசியிருப்பது, மிக முக்கியமானது. இளைஞர்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியது. இந்த நிலையை எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல பயனுள்ள புத்தகங்களைத் தரவேண்டும்," என இலக்கியவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய வாசகர்களை ஈர்க்கும்...
இதுகுறித்து, அன்றைய விழாவில் பங்கேற்ற பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கூறுகையில், "இளைஞர்கள் நிறைய படிக்கணும்னு சூப்பர் ஸ்டார் சொல்லியிருக்கார். ரஜினி அன்றைக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலக்கிய உலகுக்கே தனி கவன ஈர்ப்பு கிடைச்சிருக்கு. தன்னுடைய அலுவல்களுக்கிடையில், ஒரு எழுத்தாளனைக் கவுரவிக்க அவர் வந்தது அவர் எந்த அளவு பெருந்தன்மை, நேர்மையாளர் என்பதைக் காட்டுகிறது. தீவிர இலக்கியத்தை நோக்கி பல புதிய வாசகர்களை ரஜினியின் வார்த்தை ஈர்க்கும் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது," என்றார்.
ரஜினி செய்திருக்கும் பெரிய உதவி...
கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறுகையில், "இன்றைக்கும் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி பெரும்பான்மை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ளாமல்தான் உள்ளனர். உலகமறிந்த பெரும் புகழுக்குச் சொந்தக்காரரான ரஜினி இந்த இலக்கிய விழாவில் பங்கெடுத்து, எழுத்தாளர்களின் பணியைப் பற்றி பேசும்போது, அதற்கு கிடைக்கிற மரியாதையும் கவனமும்தான் மிக முக்கியம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார் இந்த இலக்கிய உலகுக்கு," என்றார்.
எழுத்தாளர்களை மதிப்பவர்...
எஸ் ராமகிருஷ்ணன் கூறுகையில், "ரஜினி அவர்கள் எப்போதுமே எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் மதிப்பவர். அவர்கள் தன்னைப் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் எதையும் கவலைப்படாத பெருந்தன்மையானவர். பல எழுத்தாளர்களை தன் வீட்டுக்கே வரவழைத்து பேசுவது அவருக்குப் பிடித்தமானது. இந்த இயல் விருது பாராட்டு விழா என்பதே அவரது முயற்சிதான்," என்றார்.
No comments:
Post a Comment