Friday, June 29, 2012

இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கில்...!

இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.
ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது. இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.

திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர். இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார்.

இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவுள்ளார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல்,பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செய்யும் அறிவியல் ஆசிரியர்


திசையன்விளை பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு வித்தியாசமான முறையில் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் அவர் மீது மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் குமுறலில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை உள்ள ஒரு தனியார் பள்ளியி்ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 9ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு நூதன முறையில் தண்டனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் பெற்றோர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்த மாணவர் மீது அந்த ஆசிரியர் புத்தகத்தை தூக்கி எறிந்தார். இதில் அந்த மாணவரின் கண்ணாடி உடைந்து முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் எழுதாமல் வகுப்பறைக்கு வந்துள்ளார். இதையறிந்த ஆசிரியர் அந்த மாணவியை அழைத்து கண்டித்ததுடன் அவரை நிற்க வைத்து கால் மேல் ஏறி தனது காலால் மிதித்து அழுத்தியுள்ளார். வலி பொறுக்க முடியாத அந்த மாணவி அலறியபோதும் சுமார் 20 நிமிடம் தனது காலால் மிதித்து அவரின் பாதங்களை அழுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று பள்ளி்க்கு வந்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். அவர்கள் ஆசிரியரை கண்டிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல் மாணவர்களையும் நிற்க வைத்து அவர்களின் பாதங்களில் ஏறி நிற்கும் ஆசிரியர் சில சமயங்களில் அவர்களை பின் பக்கமாக திடீரென்று தள்ளி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியர் மீது பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர் மீது மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்


மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் சூர்யா!


ஜீவா நடிக்க, மிஷ்கின் இயக்கி வரும் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படத்தின் முன்னோட்டக் காட்சியை இன்று நடிகர் சூர்யா, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

'முகமூடி' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் காட்சிகள் இன்று சத்யம் சினிமாவில் வெளியிடப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா, கேவி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரைலரை சூர்யா வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு, படத்தின் ஹீரோ ஜீவா, முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் நரேன், செல்வா, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றுப் பேசினர்.


சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை தற்போது விரிவுபடுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச தரத்திற்கு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இவ்விமான நிலையத்தில் ஓடு பாதையில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்பு பணிகளுக்காக நாளை 6 மணி நேரம் ஓடு பாதை மூடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையத்தின் அனைத்து ஓடு பாதைகளும் மூடப்படுகின்றன. 

ஓடு பாதைகள் மூடப்படுவதையடுத்து சர்வதேச, உள்நாட்டு விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, டெல்லி, கொச்சி, கொல்கத்தா செல்லும் ஏர்இந்தியாவின் விமானங்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.




மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!


மேற்கு வங்கத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணியாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்ததால் அந்த மாணவி அவமானத்தில் கூனிக்குறுகினார்.

மேற்கு வங்க மாநிலம் கைகாட்டாவில் உள்ளது பெர்கோபால்பூர் ஆதர்ஷா உயர் நிலைப் பள்ளி. அங்கு 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து சீருடை பாவாடை அணிந்து வந்தனர். இதைப் பார்த்த புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர் ஆத்திரம் அடைந்து அந்த 3 பேரையும் திட்டித்தீர்தது வகுப்பில் இருந்து வெளியேற்றினார்.

அதில் ஒரு மாணவி ஆசிரியையிடம் தான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வராததால் லெக்கிங்ஸ் அணிந்து வரக்கூடாது என்பது தனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் வெகுண்ட ஆசிரியை இருபாலர் அமர்ந்திருக்கும் வகுப்பில் அனைவருக்கும் முன்பு அந்த மாணவியின் லெக்கிங்ஸை பிடித்து கிழித்து அவரை அரை நிர்வாணமாக்கினார். மேலும் அப்படியே வீட்டுக்கும் போக வைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கூறுகையில்,

நான் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் பள்ளிக்கு வராததால் சீருடை விதிமுறைகள் எனக்கு தெரியாது என்று ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கோபப்பட்டு அனைவரின் முன்பும் எனது லெக்கிங்ஸை கிழித்தார். அவமானத்தில் நான் கதறி அழுதுவிட்டேன். அவர் எங்கள் 3 பேரையும் வகுப்பை விட்டு வெளியேற்றினார்.

பள்ளி முடிந்த பிறகு லெக்கிங்ஸை கொடுங்கள் வீட்டு இப்படியே செல்ல முடியாது என்று கெஞ்சினேன். ஆனால் அவர் கொடுக்காததால் அரை நிர்வாணக் கோலத்திலேயே வீட்டுக்கு சென்றேன் என்றார்.

இந்த விவகாரம் குறித்து அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்டுள்ளார். இதெல்லாம் சின்ன விஷயம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்வபன் பாலா தெரிவி்ததுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தது. மற்ற பிள்ளைகள் வீட்டுக்கு சென்று வகுப்பறையில் நடந்ததை தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மறுநாள் காலை பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று அந்த மாணவியின் தந்தை கூறியதால் இது குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!


சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.
சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!


நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை

மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். விக்ரமுடன் தெய்வத் திருமகள்படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். அமலாபாலை வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவொன்றில் நடனம் ஆடுவதற்காக சமீபத்தில் அழைத்து சென்றனர்.

அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அவரை நடனமாட அழைத்தனர். ஆனால் சம்பளம் தராததால் ஆட மறுத்து விட்டார். ஓட்டல் லாபியில் நின்று பேசியபடி சம்பளம் தராதது ஏன்? என்று விழா அழைப்பாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். முழு தொகையும் கொடுத்தால்தான் ஆடுவேன் என அடம் பிடித்தார்.

அமலாபால் தகராறு செய்வதை ஓட்டலுக்கு வந்து போனவர்கள் வேடிக்கை பார்த்தனர். விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர்.

சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்சினையில் தான் அவர் சண்டை போட்டார் என்றனர். அவர் கேட்டபடி டிக்கெட் எடுத்து கொடுத்த பிறகு அவரது அம்மா மற்றும் உறவினருடன் விமானத்தில் புறப்பட்டார் என்றனர்.


ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்


முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியதாது, தெருக்கூத்து மட்டும் தான் தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

மு்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு அவ்வப்போது வந்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பார். அதைப் போன்று நேற்று வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்பங்கூர் வந்தார்.
 மணிசங்கர் அய்யர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பற்றி?
பதில்: பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது உறுதி.
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை மாறுபட்டதாக இருப்பது பற்றி?
பதில்: நான் பல நாட்களாகத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியலே தெரியவில்லை. அவருக்கு தெரிந்தது தெருக்கூத்து மட்டுமே.


Thursday, June 28, 2012

'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...


குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைத்திருந்தால், நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் தேர்வு செய்திருப்பார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் தொலைக்காட்சி செய்தி ஆய்வாளரும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் சீனியர் அசோசியேட் எடிட்டருமான சேகர் ஐயர்.

இதுகுறித்து அவர் ஒரு இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில் வருமாறு...

குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. குறிப்பாக சோனியா காந்திக்கோ அல்லது பிரதமர் மன்மோகன் சிங்குக்கோ அவர் அரசியல் சட்ட ரீதியாக எந்தவிதப் பிரச்சினையையும் கொடுக்கவில்லை.

அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்னவோ உண்மைதான். அதேபோல அவரது புனே வீடும் கூட சர்ச்சையில் சிக்கியது உண்மைதான். இருப்பினும் ஒரு குடியரசுத் தலைவராக அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை.

எனவே சோனியா காந்திக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், முழு சுதந்திரமும் இருந்திருந்தால் நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் சேகர் ஐயர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் மூக்குடைப்பு ஏற்பட்டது உண்மைதானே என்ற கேள்விக்கு மிக மிக சரி. அவர்கள் மிக மோசமான முறையிலும், தவறான முறையிலும் இந்தத் தேர்தலை அணுகியுள்ளனர்.இது நிச்சயம் அவர்களுக்குப் பெரும் அடிதான். குறிப்பாக பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவு. அவர்களது கட்சியினர், தங்களது கட்சித் தலைமை செயல்பட்ட விதம் குறித்து பெரும் அதிருப்தியுடன் உள்ளனர் என்றார் ஐயர்.

பிரணாப் முகர்ஜி குறித்து சொல்லுங்களேன் என்ற கேள்விக்கு, சந்தேகமே இல்லாமல் பிரணாப் முகர்ஜி நல்ல வேட்பாளர்தான். இது நல்லதேர்வுதான். அவருக்கு அரசிலும், அரசியல் சட்டத்திலும் நல்ல அறிவும், அனுபவமும் உண்டு. அவர் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்பட்டு நிச்சயம் வரலாறு படைப்பார். அதேசமயம், பிரணாப் முகர்ஜியால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் லாபமும் கிடைக்கப் போவதில்லை, அது நிச்சயம் அக்கட்சிக்கு அசவுகரியமான விஷயமும் கூட. காரணம், விதிமுறைகளின்படியே போகக் கூடியவர் பிரணாப் என்பதால்.
நிச்சயம் 2014 லோக்சபா தேர்தல் காங்கிரஸுக்கு மிகப் பெரிய சோதனையாகவே அமையும். சுய சந்தேகத்துடன்தான் அக்கட்சி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சிக்கு அதன் மீதே நம்பிக்கை இல்லை என்பதே உண்மை என்றார்.

நிதீஷ் குமார் எடுத்த முடிவு சரியா என்ற கேள்விக்கு, நிதீஷ் குமார், தான் என்ன நினைக்கிறாரோ அதை அடைவதில் தெளிவாக இருக்கிறார். பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜக தொடர்ந்து அமைதி காப்பதை அவர் விரும்பவில்லை. குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வருகிறது. அது முடிந்த பிறகு பாஜகவில் மோடி கை ஓங்கும் என்பதை நிதீஷ் குமார் அறிவார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்காவிட்டாலும் கூட, பீகாரில் மோடியால், ஐக்கிய ஜனதாதளத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் நிதீஷ் குமார் அறிவார். காரணம், வாக்காளர்களில் கணிசமான பேர் மோடிக்கு எதிராகவே உள்ளனர் இதனால்தான் அவர் இந்த முறை பிடிவாதமாக இருந்துள்ளார் என்றார் ஐயர்.

முலாயம் சிங் யாதவ் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு புத்திசாலியான அரசியல்வாதி. தனக்கு என்ன தேவையோ அதை கடுமையாக போராடி கேட்டுப் பெறத் தயங்க மாட்டார். இப்போது கூட தனது மாநிலத்திற்கு ரூ. 90,000 கோடி நிதியுதவி தேவை என்ற பெரிய பட்டியலை அவரது மகனும், உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் தயாரித்து டெல்லிக்கு அனுப்பவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
'
பிரணாப்பை முதலில் சோனியா விரும்பவில்லை...!

பிரணாப் முகர்ஜியை முதலிலேயே சோனியா காந்தி தேர்வு செய்தாரா அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்தாரா என்ற கேள்விக்கு ஐயர் பதிலளிக்கையில், சோனியாவின் முதல் சாய்ஸ் நிச்சயம் பிரணாப் இல்லை. அவர் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாத, புத்திசாலியான ஒருவரே குடியரசுத்தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பிரணாப் முகர்ஜி அரசியல் ரீதியாக அபிலாஷைகளுடன் இருந்து வந்த ஒருவர். எனவே அவரை முதலில் சோனியா காந்தி பரிசீலிக்கவே இல்லை.
ஆனால் சூழ்நிலைகள் சோனியாவை பிரணாப் பக்கம் இழுத்துக் கொண்டு வந்து விட்டன. பிரணாப்புக்கு எதிராக மமதா பானர்ஜி பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியது, சரத்பவார், கருணாநிதி போன்றோர் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை இதற்கு முக்கியக் காரணம். பிரணாப்புக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் அவரைத் தேர்வு செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்றார்.

மமதா முன்பு 2 வழிகளே...

மமதா பானர்ஜி என்ன செய்வார் என்ற கேள்விக்கு, மமதா பானர்ஜி முன்பு இப்போது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று தேர்தலில் நடுநிலை வகிப்பதாக கூறி ஒதுங்கிக் கொள்வது. 2வது, சற்று அமைதி காத்து விட்டு கடைசியில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவிப்பது.
பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வாக்களிப்போம் என மமதா கூறினால், நிச்சயம் அவரது கட்சிக்குள்ளேயே பலரும் ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, மாற்றி ஓட்டுப் போட்டு விடுவார்கள். இது மமதாவுக்கும் தெரியும். அது அவரது முகத்தில் கரியடித்தது போலாகி விடும். மேலும் திரினமூல் காங்கிரஸ் கட்சியே பிளவுபடும் நிலையும் ஏற்படும். மமதாவின் இரும்புப் பிடியும் தளர்ந்து விடும். அந்த நிலையை அவர் விரும்புவாரா என்பது தெரியவில்லை.

2004ல் கலாம்-சோனியா இடையே என்னதான் நடந்தது...?

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் யாரிடமும் இல்லை. அவர்களுக்கிடையே என்ன நடந்தது என்பதை கலாமோ அல்லது சோனியாவோதான் விளக்கியாக வேண்டும்.

இருப்பினும் குடியரசுத் தலைவர் மாளிகையில், அப்துல் கலாமை சந்தித்து விட்டுத் திரும்பிய சோனியா காந்தி, ஆழ்ந்த சிந்தனையுடன் திரும்பினார். தனது குடும்ப உறுப்பினர்களை அவர் சந்தித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தினார். அதன் பின்னரே தன்னால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று அவர் அறிவித்தார்.

இந்தியாவிலும், இத்தாலியிலும் கடைப்பிடிக்கப்படும் குடியுரிமை விதிமுறைகள் குறித்து ஏதாவது பேசினாரா என்பது தெரியவில்லை. அல்லது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒருவருக்கு இத்தாலியில் மேயர் பதவி மறுக்கப்பட்டது குறித்த சம்பவத்தை சோனியாவிடம் அவர் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலாம்தான் மெளனம் கலைக்க வேண்டும்.

மோடியால் பிரதமராக முடியுமா...?

பாஜகவுக்கு 200 எம்.பிக்களுக்கு மேல் சொந்தமாகவே கிடைத்தால் தாராளமாக மோடியால் பிரதமராக முடியும். அதைப் பெறும் முயற்சியில்தான் தற்போது மோடியும் தீவிரமாக இருக்கிறார்.
ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமா என்பதுதான் கேள்விக்குறியாகும். இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில், குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக இன்னும் புண்பட்ட மனதுடன்தான் இருக்கின்றனர். அந்த புண்ணை ஆற்றும் பணிகளை இன்னும் மோடி செய்யவில்லை. அதைச் செய்தால் மட்டுமே அவரால் தேசிய அரசியல் பங்களிப்பு குறித்து யோசிக்க முடியும்.
அவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க வேண்டும் மோடி. வளர்ச்சியை சாதித்துள்ளேன் என்று ரோபோட் போல கூறுவதை விட்டு விட்டு சாதாரண மனிதராக முதலில் அவர் மாற வேண்டும்.