ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 25-ந் தேதியுடன் முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள், மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. அடுத்த வாரம் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.
இதனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகள் இது தொடர்பான ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளதால், அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதால், பாரதீய ஜனதா கட்சி இதில் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம் கட்சிகள் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளன. அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூடி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்தது. அதில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் சோனியாவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சோனியா கடந்த 4 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.
சோனியாவை நேற்று முன்தினம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையொட்டி மளமளவென பல்வேறு சம்பவங்கள் நடந்தன.
உயர்நிலை கூட்டம் முடிந்தவுடன் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல், நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்துக்கு சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு அகமது படேல் 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா வீட்டுக்குச் சென்றார். பிரணாப்புடன் நடத்திய பேச்சு விவரங்களை அவர் சோனியாவிடம் கூறினார்.
இந்த சந்திப்புகள் முடிந்ததும் பிரணாப் முகர்ஜி நேற்றிரவு அவசரம், அவசரமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அடுத்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் என்பதை சூசகமாக உணர்த்துவது போல் உள்ளது.
சோனியாவை கடந்த புதன்கிழமை சந்தித்த ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத்சிங், ஜனாதிபதி பதவிக்கு பிராணாப் முகர்ஜியே பொருத்தமானவர் என்றார். அதுபோல் மறுநாள் (வியாழக்கிழமை) சோனியாவை சந்தித்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பும் முன்பு பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
பிரணாப் முகர்ஜிக்கு அவர் தங்க நிற சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இது, காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜிதான் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதை வலுவாக உறுதிபடுத்துவதாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி 12 அல்லது 13-ந்தேதி வெளியிட்டு விடுவார். அதன் பிறகு சோனியா, காங்கிரஸ் வேட்பாளரை 15 அல்லது 16-ந்தேதி அறிவிப்பார்.
சோனியா அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று அதன் கூட்டணியில் உள்ள தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய லோக்தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஏற்க தயார் என்று கூறியுள்ளன.
மம்தாபானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை தன் முடிவை வெளியிடவில்லை என்றாலும் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் மண்ணின் மைந்தர் என்ற நிலையில் அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
பி.ஏ.சங்மாவை நிராகரித்துள்ள இடதுசாரி கட்சிகள், கடைசியில் பிரணாப் முகர்ஜியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே ஜனாதிபதி தேர்தலில் பிராணாப்முகர்ஜி மிக எளிதாக வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment