உண்மையிலேயே திமுககாரர்தானா மு.க.அழகிரி... இதை நாம் கேட்கவில்லை, உண்மையான, திமுகவுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்தவர்கள் ஆதங்கத்துடன் கேட்கிறார்கள்.
ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளைத்தான் கட்டுப்பாடானவர்கள், கட்சித் தலைமைக்கு எதிராக ஒரு முனுமுனுப்பைக் கூட உதிர்க்காதவர்கள், உடல், பொருள், ஆவி அத்தனையையும் தாங்கள் சார்ந்த இயக்கத்துக்காக இழக்கத் தயாராக இருப்பவர்கள் என்ற பெயரை வைத்திருந்தனர்.
ஆனால் திராவிட இயக்கங்கள் இந்தப் போக்கை அப்படியே மாற்றின. குறிப்பாக திமுக. திமுகவை ஒரு கட்சியாக யாரும் பார்க்க முடியாது, அது ஒரு இயக்கம். அதில் ஈடுபடுபவர்கள், கட்சிக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள்.
மதுரையில் ஒரு திமுககாரர் இருந்தார். அவருக்கு இப்போது வயது நிச்சயம் 80க்கு மேல் இருக்கும், உயிரோடு இருக்கிறாரா என்று கூட தெரியவில்லை. ஆசிரியராக இருந்தவர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு அவரைப் பார்த்தபோது ஒரு நெருப்பைப் பார்ப்பது போல இருக்கும். திமுககாரன் எப்படி இருப்பான் என்பதை அவரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவருக்கு மனைவி, 4 குழந்தைகள். நான்கு பேரையும் அவர் நன்கு படிக்க வைத்தார். அத்தனை பேரும் பட்டதாரிகள். அவர்களில் ஒருவர் பெண்.
நான்கு பேரையும கட்சிப் பணியில் ஈடுபடுத்தினார் அந்தத் தொண்டர். அவருடைய மனைவியும் கூட திமுகவில்தான் இருந்தார். கட்சிப் பதவி எதையும் அவர் வகிக்கவில்லை, பதவியை கேட்கவும் இல்லை. சாதாரண தொண்டராக இருந்தவர். எப்போதும் கருப்பு சிவப்பு நிறத்திலான உடையைத்தான் அணிவார்.
அருமையாக ஆங்கிலம் பேசுவார், அழகான தமிழைப் பொழிவார். திமுகவில் ஆரம்ப காலத்திலிருந்து உறுப்பினராக இருந்தவர். அண்ணா கட்சியைத் தொடங்கியபோது திமுகவை வளர்க்க ஊர் ஊராகப் போனவராம், அப்போது அவரிடம் சைக்கிள் வைத்துக் கொள்ளக் கூட வசதி இல்லாததால் பல கிலோமீட்டர்களுக்கு நடந்தே போய் பிரசாரம் செய்வாராம். கையில் கொடியும், கொஞ்சம் சில்லறைகளும் மட்டுமே இருக்குமாம். வறுத்த கடலையை வாங்கி பையில் போட்டுக் கொண்டு வாய் வலிக்க, நரம்பு புடைக்க, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவரும் அவருடைய சகாக்களும் பேசுவார்களாம்.
காங்கிரஸார்தான் அப்போது திமுகவினருக்கு முக்கிய எதிரிகளாக இருந்தவர்கள். காங்கிரஸாரின் கோட்டையாக கருதப்பட்ட ஊர்களுக்குப் போகும்போதெல்லாம் திமுகவினர் தாக்குதலுக்குள்ளாவார்களாம், ஏளனம் பேசுவார்களாம், கிண்டலடிப்பார்களாம். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாக்கினாலும் தாங்கிக் கொண்டு கட்சியை வளர்க்க பாடுபட்டாராம் அந்த ஆசிரியர். இப்படி கட்சிக்காகவே என்று தனது குடும்பத்தோடு உழைத்த அந்த ஆசிரியர் கடைசி வரை ஒரு வார்டு செயலாளர் பதவியைக் கூட வகித்தவரில்லை, ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட அடைந்ததில்லை என்பது இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தரக் கூடியது.
இந்த ஆசிரியர் ஒரு உதாரணம்தான், இப்படி ஓராயிரம் பேர், ஒரு லட்சம் பேர் இந்த தமிழகத்தில் ஆங்காங்கு இருந்து கொண்டுதான் உள்ளனர்.
ஆனால் இன்று என்ன நிலைமை... மு.க.அழகிரியையே எடுத்துக் கொள்ளுவோம். ஆரம்பத்திலிருந்தே அசங்காமல் கசங்காமல் திமுகவில் இருந்து வருபவர் அவர். ஆரம்பத்திலிருந்தே 'தலைவராக' திகழ்ந்து வருபவர். கட்சிக்காக பட்டி தொட்டியெங்கும் போய்ப் பேசியதில்லை, வியர்க்க விறுவிறுக்க எந்தப் போராட்டத்திலும் கலந்து கொண்டதில்லை. எந்த தியாகத்தையும் செய்ததில்லை, ஏவல் செய்ய நூறு பேர், ஏறி மிதிக்க வேண்டுமானால் 200 பேர் என்ற வகையில்தான் அவரது அரசியல் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது.
முரசொலியைப் பார்ப்பதற்காக என்று கூறி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அழகிரி - குடும்ப அரசியலைப் பற்றி இங்கு பேச விரும்பவில்லை - வந்தவர், தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார், தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தார்.
அந்த செல்வாக்கை வைத்துக் கொண்டு மதுரைப் பக்கம் எது நடந்தாலும் அது என்னைக் கேட்டுத்தான் என்ற அளவுக்கு டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். தா.கிருட்டிணன் படுகொலைக்குப் பிறகு மேலும் பிரபலமானார். அவரது பலமும், செல்வாக்கும் பெரிதாகிப் போனது. கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியை அவர் முதல் முறையாகப் பெறக் காரணம், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அவரது தலைமையில் திமுக சந்தித்த சில இடைத் தேர்தல்கள். இந்த இடைத் தேர்தல் வெற்றிக்கு அழகிரியின் உழைப்பு காரணமா, கரன்சி நோட்டுக்களின் சரமாரி பொழிவு காரணமா என்று பட்டிமன்றமே வைக்கலாம் - கலைஞர் டிவியில் பட்டிமன்றம் நடத்தும் திண்டுக்கல் லியோனியை வைத்து.
இப்படி சில பல வெற்றிகளை அழகிரி தலைமையில் கண்டதால் அழகிரிக்கு முக்கியத்துவம் கூடிப் போனது, தொடர்ந்து எம்.பியானார், மத்திய அமைச்சரானார்.
ஆனால் மத்திய அமைச்சராகி என்ன சாதனையைச் செய்தார் அழகிரி என்று பார்த்தால் நிச்சயம் எதுவும் தென்படாது. கட்சிக்கும் இவர் உருப்படியாக எதையாவது செய்துள்ளாரா என்று பார்த்தால் அதுவும் ஒன்றும் புரியவில்லை. ஆரம்பம் முதல் இப்போது வரை அவர் செய்து வருவது பிளாக்மெயில் மற்றும் மிரட்டல் அரசியல் மட்டுமே.
கட்சி கடுமையான கஷ்டத்தில் இருந்தபோது- அதாவது மதுரையைத் தாண்டிய திமுகவைச் சொல்கிறோம் - அழகிரி வந்து கை கொடுத்தாரா, காப்பாற்றினாரா, போராடினாரா என்று பார்த்தால் இல்லை என்ற பதில்தான் வரும்.
இப்படி எந்த வகையிலும் கட்சிக்காக கடுமையாக உழைத்த தலைவராக இதுவரை அழகிரி இருந்ததில்லை. இந்த நிலையில் தொடர்ந்து சமீபகாலமாக அவர் கட்சியின் முக்கிய கூட்டங்களையெல்லாம் புறக்கணித்து வருகிறார். உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார், இன்று மிக முக்கியமான செயற்குழுக் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார். இத்தனைக்கும் இந்தக் கூட்டமெல்லாம் ஸ்டாலினுக்குப் பதவி கொடுப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டமல்ல, காவல்துறையிடம் சிக்கி உதைபட்டும், வழக்குகள் தொடரப்பட்டும் சித்திரவதைக்குள்ளாகி வரும் கட்சியினரை எப்படி காப்பாற்றலாம், என்ன செய்யலாம் என்பதை ஆராய கூட்டப்பட்ட கூட்டம். இதற்கே அவர் வரவில்லை, மாறாக பண்ணை வீட்டில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் உண்மையான திமுககாரர்தானா அழகிரி என்ற பேச்சு எழுந்துள்ளது.
தலைவர் பதவியை அடைவது என்பது ரொம்ப ஈசியான விஷயம். ஆனால் அந்தப் பதவிக்குரிய தகுதியை அடைவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. அதை தனது தந்தை கருணாநிதியிடமிருந்தே கற்றுக் கொள்ளலாம் அழகிரி. கருணாநிதி திமுகவுக்குத் தலைவரானது அவ்வளவு சுலபமாகவா நடந்தது - அவர் எப்படி தலைவர் பதவியை அடைந்தார் என்பது வேறு விஷயம் - ஆனால் தனக்கு கடும் போட்டியாளர்களாக அப்போது இருந்த நெடு்ஞ்செழியன், ஈவேகி சம்பத், எம்.ஜி.ஆர் என எத்தனையோ பேரை அவர் எப்படி துணிச்சலுடன் சந்தித்தார், நேருக்கு நேர் சந்தித்தார், முட்டி மோதினார், அவர்களை விட தலைமைத்துவத்தில் தான் உயர்ந்தவன் என்பதை நிரூபித்தார், தற்போது வரை அப்பதவியில் எப்படி செயல்பட்டு வருகிறார் என்பதை அழகிரி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அழகிரியின் புறக்கணிப்பு திமுகவை நிச்சயம் ஒன்றும் செய்து விட முடியாது - அது ஒரு எறும்பு, யானையைக் கடிப்பது போல. ஆனால் நிச்சயம் அழகிரிக்கு நல்லதல்ல என்பதே உண்மையான திமுகவினரின் எச்சரிக்கை கலந்த அட்வைஸாகும்.
No comments:
Post a Comment