நித்தியானந்தாவுக்கு வழஙகப்பட்ட சம்மனை ஏன் அவர் பெறவில்லை என்று கன்னட தொலைக்காட்சி சானலின் செய்தியாளர் கேள்வி கேட்டதால் அவரை வெளியேற்ற நித்தியானந்தா உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் பெங்களூர் வந்து பிடதி ஆசிரமத்தில் தங்கியுள்ளனர். நேற்று இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமெரிக்காவச் சேர்ந்த நித்தியானந்தாவின் பெண் சீடர் ஆர்த்தி ராவ், நித்தியானந்தா மீது சுமத்தியுள்ள பாலியல் புகார் குறித்து கன்னட சுவர்ணா டிவியைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நித்தியானந்தா, பாலியல் நோய்க்காக ஆர்த்தி ராவ் என்னிடம் சிகிச்சை பெற வந்தார். அவருடன் எனக்கு குரு சிஷ்யை உறவு மட்டுமே உள்ளது. அவர் மீது அமெரிக்கா, தமிழகம், ராம நகரம், வாரணாசியில் வழக்குகள் உள்ளன. அவற்றில் வழங்கிய சம்மனை பெற்று கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார் என்றார்.
அப்போது சுவர்ணா டிவி நிருபர் குறுக்கிட்டு, ஆர்த்தி ராவ் விவகாரம் தொடர்பாக 2001ல் உங்களுக்கு வந்த சம்மனை ஏன் வாங்கவில்லை? என்று கேட்டார். அதற்கு நித்தியானந்தா, எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார். அதையடுத்து அந்த நிருபர், அந்த சம்மன் நகல் என்னிடம் உள்ளது என்றார். மேலும் அதை நித்தியானந்தாவிடம் கொடுக்க எழுந்து சென்றார்.
இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நித்தியானந்தா உத்தரவிட்டார். இதையடுத்து நித்தியானந்தா ஆதரவாளர்கள் அவரைச் சூழ்ந்து தள்ளியபடி வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவர்ணா டிவி நிருபரை வெளியேற்றியதைக் கண்டித்து பிற பத்திரிக்கையாளர்களும் எழுந்ததால் பத்திரிக்கையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது.
நித்தியானந்தா ஆதரவாளர்கள் சுவர்ணா டிவி நிருபரை சூழ்நது கொண்டு தாக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன்...
அதேசமயம், சுவர்ணா டிவி சேனலின் தலைவர் அஜீத் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தியதாக நித்தியானந்தா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதில் ஆசிரம நிர்வாகி ஆத்மபிரபானந்தாவும், இன்னொருவரும் காயமடைந்ததாக அது கூறியுள்ளது.
சுவர்ணா டிவிக்குச் சொந்தமான வேனில் 50க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வந்ததாகவும், தங்களை கர்நாடக நவ நிர்மான சேனாவைச் சேர்ந்த தொண்டர்கள் எனக் கூறிக் கொண்டதாகவும், நித்தியானந்தாவை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.
அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆசிரம நிர்வாகிகள் விசாரிக்க முயன்றபோது அந்த குண்டர்கள் தாக்குதலில் இறங்கியதாகவும், மயத்தினாந்தா என்பவரை முதலில் தாக்கியதாகவும், பிறகு ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு பிரம்மச்சாரி வைத்திருந்த கேமராவைப் பிடுங்கி சேதப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள்.
அதன் பிறகு பெரிய கல்லை எடுத்து ஆத்மபிரபானந்தாவைத் தாக்கியதால் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.
இந்த வன்முறையை பிடதி போலீஸார் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் நித்தியானந்தா தரப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment