நாட்டின் சவால்களை சமாளிக்க இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும் என கடலூரில் நடந்த விழாவில் அப்துல்கலாம் பேசினார்.
பசுமை கலாம் திட்டத்தின் கீழ் 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு அதன் முதல் பகுதி நிறைவு விழா, பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் துவக்க விழா ஆகியன கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடையே பேசினார்.
மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ,மார்க் குழுமத் தலைவர் ஜி.ஆர்.ரெட்டி, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் டாக்டர் அப்துல்கலாம் பேசியபோது,
’’விவேக்கிடம் ( நடிகர் )ஒரு முறை மரம் வளர்ப்பதை பற்றி திரைப்படத்தின் மூலம் எப்படி எடுத்து செல்வது என்று ஆலோசித்தேன்.
அதனையே அவர் இலக்காக கொண்டு 10 லட்சம் மரக்கன்று என்ற இலக்கினையும் தாண்டி 14 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதித்து காட்டியுள்ளார். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்க விடாமல் செய்வது தான் கனவு. பசுமை கலாம் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சாதனை படைப்பதற்கு அந்த கனவு தான் அச்சாரமிட்டிருக்கிறது.
ஒரு மரம் 20 கிலோ கிராம் கார்பன்டை ஆக்சைடை ஒரு வருடத்துக்கு உள்வாங்கி அழிக்கிறது. அப்படியென்றால் நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதை பாதுகாத்தால் 100 கோடி மரங்கள் நடும் இலக்கை இலகுவாக அடைய முடியும். அப்படி 100 கோடி மரங்கனை நாம் நட்டால் இந்தியா மாறி வரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து நம் எதிர்கால வாழ்வை வளப்படுத்தும்.
நன்கு வளர்ந்த ஒரு கோடி மரங்களால் 20 லட்சம் டன் கரியமில வாயுவை உள்ளிழுத்து 14 லட்சம் டன் ஆக்சிஜனை சுற்றுப்புறச்சூழலுக்கு மரங்கள் அளிக்கும்.
கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை 1.5 கோடி இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். ஒவ்வொரு இளைஞரும் மாணவரும் தனித்துவமானவர்கள். அதனை அனைவரும் நிரூபிக்க வேண்டும். மன எழுச்சி அடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நம் இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும்.
ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். விடாமுயற்சி வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடைய செய்ய வேண்டும். இந்த 4 குணங்களும் இருந்தால் கனவு நினைவாகும்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment