லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஒரே ஒரு அணியை அனுப்ப அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது.
அதன்படி ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதி பெற்ற இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான லியாண்டர் பயசுடன் மகேஷ் பூபதி ஜோடியாக விளையாடுவார் என்று அறிவித்தது. கருத்து வேறுபாடு காரணமாக பயசுடன் விளையாடாமல் வேறு ஒரு ஜோடியுடன் ஆடும் மகேஷ் பூபதி இந்த முடிவை ஏற்க மறுத்தார்.
ஒலிம்பிக்கில் பயசுடன் இணைந்து ஆடமாட்டார் என்று அறிவித்தார். அதோடு மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆடும் ரோகன் போபண்ணாவும் பயசுடன் சேர்ந்து ஆடமாட்டேன் என்று அறிவித்தார்.
இதனால் ஜூனியர் வீரர் ஒருவரை பயசுடன் ஜோடியாக ஆட வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு பயஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அனுபவம் இல்லாத வீரரை ஜோடியாக்கி னால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன் என்று மிரட்டினார்.
இந்த நிலையில் இந்த விஷயத்தில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று முடிவு எடுத்து அறிவித்தது. அதன்படி ஒலிம்பிக் போட்டிக்கு ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2 அணிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பயஸ்- விஷ்ணுவர்த்தன் ஒரு ஜோடி என்றும், மகேஷ் பூபதி-போபண்ணா மற் றொரு ஜோடி என்றும் அறிவித்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன், லியாண்டர் பயஸ் ஆடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவுக்கு லியாண்டர் பயஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகலாம் என்று அவரது தந்தை வேஸ் பயஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இந்த முடிவை எனது மகன் ஏற்றுக்கொள்ள மாட்டான். மகேஷ்பூபதி- போபண்ணா மிரட்டலுக்கு டென்னிஸ் சங்கம் பணிந்து விட்டது என்றார்.
இரண்டு அணி மற்றும் அனுபவமில்லாத வீரருடன் ஆடுவது ஆகியவற்றின் காரணமாக பயஸ் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார். விம்பிள்டன் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ள அவரிடம் இது குறித்து கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
லியாண்டர் பயசை சமானப்படுத்தி ஒலிம்பிக்கில் ஆட வைக்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்து உள்ளது. அதன்படி டென்னிஸ் தேர்வு குழு தலைவர் ரோகித் லண்டன் செல்கிறார்.
6-வது முறையாக ஒலிம்பிக்கில் ஆடி சாதனை படைக்க இருக்கும் நிலையில் பயஸ் தற்போது அதில் விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment