திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான ஈரோடு முத்துசாமி திமுகவில் இருந்து வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் ஆதரவாளர்கள் பட்டாளம் உண்டு. மு.க.ஸ்டாலினை நம்பி அரசியல் செய்தவர்கள் தமிழகத்தில் அதிகம். உதாரணத்திற்கு திருச்சி பரணி, திருவாரூர் அசோகன், திருவொற்றியூர் விஜயன், கும்மிடிப்பூண்டி வேணு, திருவள்ளூர் சிவாஜி, வாலாஜாபேட்டை அசேன், ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ஈரோடு என்.கே.கே.பி.ராஜா என ஒரு பட்டாளமே உண்டு.
அதே போல கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, புதுக்கோட்டை ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் எல்லாம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் தான். இதில் திருவாரூர் அசோகன் அதிமுகவுக்கு மாறி டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாகிவிட்டார். மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக இருந்த பரிதி இளம்வழுதி பிறகு முரசொலி மாறனிடம் தஞ்சமடைந்தார். இப்போது ஸ்டாலினின் எதிரணியில் உள்ளார். தேனி மூக்கையா முழு மூச்சாக ஸ்டாலின் ஆதரவாளராக இருந்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பக்கம் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு விரும்பி வந்தவர் ஈரோடு முத்துசாமி என்று சொல்வதை விட கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டவர் என்றே திமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது. அதிமுகவில் இருந்து முத்துசாமி வெளியேற வேண்டாம் என்று ஜெயலலிதாவே அறிக்கைவிடும் அளவு அவருக்கு அங்கு முக்கியத்துவம் இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள முத்துசாமியின் வீட்டுக்கே மு.க. ஸ்டாலின் போய் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவில் இணைய வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர் மு.க.ஸ்டாலின் விசுவாசியாக உள்ளார்.
இந்த நிலையில் அப்படி அழைத்து வரப்பட்ட முத்துசாமிக்கும் ஈரோட்டு மாவட்டச் செயலாளர் என்.கே.கே.பி. ராஜாவுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தை விரிவாக திமுக தலைமைக்கு இரு ஆதரவாளர்களுமே அனுப்பி வைத்துள்ளனர்.
ஈரோட்டில் நடந்த ஊழியர் கூட்டத்தில் முத்துசாமியை ஒருமையில் பேச பிரச்சனை பெரிதாகி தலைமைக்கு புகார் சென்றது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மன்றாடியாருக்கு திமுக தலைமை உத்தரவிட, அவரும் விசாரித்து அறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த அறிக்கையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்க பேராசிரியர் மற்றும் துரைமுருகனுக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்.கே.கே.பி.ராஜா மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதற்கு பின்னணியில் மு.க. ஸ்டாலின் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் முத்துசாமியும், அவரது ஆரவாளர்களும் மனம் உடைந்து போனதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து முத்துசாமியிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் அண்ணே திமுகவில் நமக்கு உரிய மரியாதை இல்லை. இவுங்களை நம்பி இங்க இருந்தால் எந்த நன்மையும் இனி நடக்காது போல் இருக்கு. அதிமுக ஆட்சி முடிய இன்னும் 4 வருடம் இருக்கு. அத்தனை காலம் அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டி வரும். இது தேவையா. ஜெயலலிதா உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதனால் அதிமுக பக்கம் போய்விடலாம் என தூபம் போடுகின்றார்களாம்.
இதனால் ஈரோடு முத்துசாமியை மீண்டும் அதிமுகவிற்கு அழைத்துச் செல்ல சிலர் முயன்று வருவதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment