அமெரிக்கா அதிபர் ஒபாமாவுடன் கட்டியணைத்து நெடுநாள் நண்பர்போல தேநீர் தயாரித்து கொடுத்து ரொம்பவே நட்புமழை பொழிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனால் அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா மேயராக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பரத் ஷாவோ அமெரிக்கா, தீவிரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை நடத்துகிறது என்று பொளந்து கட்டியுள்ளார்.
இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். இந்தியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்ட ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பும் விருந்தும் அளித்தார்.
நெடுநாள் நெருங்கிய நண்பரைப் போல ஒபாமாவும் மோடியும் வெளிப்படுத்திக் கொண்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மோடி போட்டியிட்ட லோக்சபா தொகுதியான வதோதராவின் மேயரான பரத் ஷா அமெரிக்காவை பிடிபிடியென விமர்சித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வதோதராவின் மேயர் பரத்ஷா குடியரசு தின நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியா உருவானபோது பாகிஸ்தானும் உருவானது. அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து தீவிரவாதிகளை உருவாக்குகிற தொழிற்சாலைகளை நடத்தி வருகிறபோதும் நாம் வளர்ச்சிப் பாதையை நோக்கித்தான் செல்கிறோம்.
சொன்னதை சொல்லும் பச்சை கிளியைப் போல அமெரிக்கா அதிபர் ஒபாமாவை பேச வைத்திருக்கிறார் பிரதமர் மோடி என்றார். அமெரிக்காவை மிகக் கடுமையாக பாஜக மேயர் பரத் ஷா விமர்சித்திருப்பது அம்மாநிலத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
No comments:
Post a Comment