Thursday, January 29, 2015

ஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1

சென்ற வருடம் இரண்டு அபாயகரமான கொலையாளிகளை ஹாலிவுட் அறிமுகப்படுத்தியது. அவர்களின் சாயலில் ஏற்கனவே பலர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், எதிரி என்று கருதுகிறவனை யோசிக்காமல் கொலை செய்யும் இவர்களை உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன்பட ரசிகர்கள் விரும்பி ரசிக்கிறார்கள்.

ஹாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர், இயக்குனர் Antoine Fuqua . ட்ரெய்னிங் டே, ஷுட்டர், கிங் ஆர்தர், த டியர்ஸ் ஆஃப் சன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கியவர். 2013 -இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த படம், ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன்.

இவரது சினிமா வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் டென்சல் வாஷிங்டன் நடித்த ட்ரெய்னிங் டே. இந்தப் படத்தில் வரும் சில காட்சிகளை அப்படியே ஜேஜே படத்தில் பயன்படுத்தியிருப்பார் சரண். சென்ற வருடம்  டென்சல் வாஷிங்டன் நடிப்பில் Antoine Fuqua  இயக்கத்தில் வெளியான படம், த ஈகுவலைசர்.

த ஈகுவலைசரில் டென்சலின் பெயர், ராபர்ட் மெக்கல். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை. ராக்கோழி. இரவானால் குளித்து, நீட்டாக உடையணிந்து கூட்டமில்லாத நாற்புறமும் கண்ணாடிகளாலான ரெஸ்டாரண்டுக்கு வந்துவிடுவார். ஒரு காபியை ஆர்டர் செய்து, புத்தகம் படிப்பதுதான் அவரது இரவுப்பொழுது வேலை. 

இந்த இரவு வாழ்க்கையில் டெரி என்ற இளம் பாலியல் தொழிலாளியின் அறிமுகம் டென்சிலுக்கு கிடைக்கிறது. அவள் கஸ்டமருக்காக காத்திருப்பது அந்த ரெஸ்டாரண்டில்தான்.

யாருடனும் பெரிய ஒட்டுதலில்லாத இந்த கதாபாத்திரத்தை டென்சல் ஏற்கனவே பல படங்களில் செய்திருக்கிறார். இந்தப் படத்துடன் அதிகமும் ஒத்துப் போவது டோனி ஸ்காட்டின், மென் ஆன் ஃபயர். சிஐஏ யின் ட்ரெய்ன்ட்டு கில்லராக இருந்து, காதலியை பறிகொடுத்து, வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் மெக்சிகோ வரும் டென்சல், பணக்கார வீட்டு சிறுமியின் பாதுகாவலராக வேலைக்கு சேர்கிறார், ஒரு மன மாறுதலுக்கு. நாள்கள் செல்கையில் அந்த சிறுமியுடன் டென்சலுக்கு ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் டென்சிலை சுட்டு அந்த சிறுமியை பணத்துக்காக கடத்திவிடுகின்றனர். 

சிஐஏயின் ட்ரெய்ன்டு கில்லரான டென்சலுடன் ஒப்பிடுகையில் குழந்தையை கடத்தியவர்கள் வெறும் பச்சா. டென்சல் ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறார். ஒவ்வொரு கொலையும் ஒரு கலை. வசனங்கள் அமர்க்களம். காரில் வரும் எதிhpயை கொல்ல சாலைக்கு எதிரிலுள்ள மாடி வீட்டில்  துப்பாக்கியுடன் காத்திருக்கிறார் டென்சல். வீட்டிலிருப்பது ஒரு வயதான தம்பதி. கொலை செய்வது தப்பு. ஜீசஸ் அனைவரையும் மன்னிக்கும்படி சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் அந்த வயதான தம்பதிகள். மன்னிக்க நான் ஜீசஸ் கிடையாது. ஜீசஸுக்கும் அவர்களுக்கும் சந்திப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே என்னுடைய வேலை என்று எதிரியை போட்டுத் தள்ளுகிறார்.

ஏறக்குறைய இதே டென்சல்தான், த ஈகுவலைசரிலும். ஆனால், அந்தளவு மூடியில்லை. கொஞ்சம் கலகலப்பானவர். ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நாவலைப் படித்து டெரியுடன் உரையாடுகிறார். டெரியையும் அவளைப் போன்ற இளம் பெண்களையும் வைத்து விபச்சாரம் செய்து வருவது ஒரு ரஷ்ய கும்பல். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று, முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு, முகம் கருகிய நிலையில், ஒரு இளம் பெண் அவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறாள். அவள் தப்பிக்க நினைக்கிற மற்ற பெண்களுக்கான ஒரு பாடம்.

டெரி தன்னை வெறியுடன் காயப்படுத்தும் ஒரு கஸ்டமரை தாக்கி விடுகிறாள். அதனால், அவளை வைத்து விபச்சாரம் செய்யும் ரஷ்யர்கள் கண்மூடித்தனமாக டெரியை தாக்கி ஐசியுவுக்கு அனுப்பிவிடுகின்றனர். டென்சில் வருகிறார். டெரியின் தோழியின் மூலமாக நடந்தவைகளை கேட்டறிகிறார். பெரும் தொகையை தந்து, டெரியை விட்டுவிடும்படி ரஷ்யர்களை கேட்கிறார். டென்சிலின் வார்த்தையில் சொன்னால், அவர் ஒரு ஆஃபரை அவர்களுக்கு தருகிறார்.

யாருய்யா இந்த கோட்டிக்கார ஆள் என்று ரஷ்யர்கள் சிரித்து டென்சிலை அனுப்புகின்றனர். அதன் பிறகு நடப்பது கண்ணில் பூச்சி பறக்கும் ஆக்ஷன் அடிதடி. ஐந்து பேர் க்ளோஸ். ஏன், எதற்கு என்பதை ஆராய ரஷ்யாவில் இருக்கும் கொலையுண்டவர்களின் பாஸ் தனது வலக்கையை (Marton Csokas) அனுப்பி வைக்கிறார். இந்த வலக்கைதான் படத்தின் நம்பிக்கை தும்பிக்கை எல்லாம். 

Marton Csokas  -இன் அமைதியான இறுக்கமான நடிப்பு டென்சலுக்கு கடும் சவால் விடுகிறது. ரஷ்யாவிலிருந்து வரும் இவர், ஒருவனை அடித்தே கொன்று விடுகிறார். உடன் வரும் போலீஸ்காரர் என்ன இப்படி பண்ணிட்ட, இது என்னாகும்னு தெரியுமா என்று பதட்டப்பட, மனிதர் செம கூலாக, முஷ்டியில் ஒட்டியிருக்கும் துணுக்கை எடுத்தபடி, இதுவொரு மெசேஸ். நான் இங்க வந்திருக்கேன்னு சொல்ற மெசேஜ் என்கிறார். 

இவரும் டென்சலும் சந்திக்கிற இரு காட்சிகள் வருகின்றன. இரண்டுமே செமத்தியாக படமாக்கப்பட்டுள்ளன. ஓடுகிற நாய்க்கு ஒருமுழம் முன்னால் கல்லெறிய வேண்டும் என்பது போல், வில்லனின் நகர்வுக்கு ஓரடி முன்னால் எப்போதுமே செயல்படும் டென்சலின் கதாபாத்திரம் யாருக்காவது பிடிக்காமல் போனால்தான் ஆச்சரியம்.

டென்சலின் கதாபத்திரத்தைப் பற்றி சொல்வதானால், அதுவொரு ரயில். அதுபாட்டுக்கு தனது ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவாக ட்ராக்கைவிட்டு இறங்காது. ஆனால், அதற்கு குறுக்கே எது வந்தாலும், தூக்கி எறிந்துவிட்டு போய்க் கொண்டேயிருக்கும். 

த ஈகுவலைசர் கொலையாளி டெரி என்ற மானுடப் பெண்ணுக்காகவும், அவளைப் போன்ற பிற பெண்களுக்காகவும் கொலைகள் செய்தார். ஆனால், இன்னொரு கொலையாளி கொன்று குவித்தது ஒரு சின்ன நாய்க்காகவும் 69 -ஆம் ஆண்டு மாடல் காருக்காகவும். அவரது எதிரிகள் நடுங்குவதற்கு அந்த கொலையாளி ஆயுதம் தூக்க வேண்டியதில்லை. அவரது பெயரைச் சொன்னாலே போதும். எதிரிகளின் பேண்டை நனைய வைக்கும் அந்த கொலையாளியின் பெயர்.... அடுத்த பாகத்தில் பார்ப்போம்

No comments:

Post a Comment