மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர், ரஜினி நடித்த லிங்கா படக்கதை தன்னுடையது என்று கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிவில் வழக்கு தாக்கல் செய்யும்படி யும் அதுவரை படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ரூ.10 கோடியை வங்கியில் டெபாசிட் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதை ஏற்று வங்கியில் பணம் டெபாசிட் செய்தபிறகு படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ரவிரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘லிங்கா படத்தின் கதை எனது முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்றுதான் என உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சரண் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் மார்ச் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment