Thursday, December 23, 2010
ஐஐஎம் கல்வி நிறுவன பாடமாக ரஜினியின் முத்து, எந்திரன்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் முத்து திரைப்படங்களை அகமதாபாத்தின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) மாணவர்களுக்கு தனி பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.
ஐஐஎம் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு எலெக்டிவ் கோர்ஸாக 'Contemporary film industry: A business perspective' என்ற பிரிவில் இந்தியத் திரைப்படங்கள் குறித்து ஆராய்ந்து கட்டுரை எழுதவேண்டும். இது ஒரு தனி பாடப் பிரிவாகும்.
இந்தப் பிரிவில் இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டின் நாயகனும் ரஜினிதான். இந்தப் படங்களில் ஒன்று முத்து. மற்றொன்று எந்திரன் / ரோபோ.
முத்து திரைப்படம் சர்வதேச அளவில் சாதனைப் படைத்த முதல் இந்தியப் படமாகும். டான்சிங் மகாராஜா எனும் பெயரில் இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி 250 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் சாதனைப் படைத்தது. இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட் உள்ளதை நிரூபித்து, புதிய வர்த்தகத்தைக் காட்டிய படம் முத்து. ரஜினியின் நடனமும், ரஹ்மானின் இசையும் சர்வதேச மக்களையும் ஆட்டி வைத்தன.
அடுத்த படமான எந்திரன், ரஜினியை இந்திய சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்திலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்ற உச்சத்துக்குக் கொண்டுபோனது. ரூ 380 கோடி வரை வசூலைக் குவித்து இந்தியாவின் நம்பர் ஒன் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஒரு படத்தை பொருத்தமான நடிகர்களைக் கொண்டு திட்டமிட்டு தரமாக உருவாக்குதல், சரியாக மார்க்கெட்டிங் செய்தல், வர்த்தகத்தில் முதல் நிலையில் கொண்டுவந்து நிறுத்துதல், இவை அனைத்துக்கும் மேல், இந்தப் படங்களை ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் வெற்றி பெறச் செய்த விதம் போன்ற பல காரணிகளுக்காக இந்தப் படங்களை முதுகலைப் பட்டதாரிகளுக்கு பாடங்களாக வைத்துள்ளனர்.
ஏற்கெனவே மத்திய அரசின் சிபிஎஸ்ஸி பள்ளி பாடத் திட்டத்திலும் மாணவர்களுக்கு பாடமாக ரஜினியின் வாழ்க்கை வரலாறு வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெரும் அங்கீகாரம் இது. ஐஐஎம் என்பது உலக அளவில் வணிக மேலாண்மைப் படிப்புக்கு புகழ்பெற்ற ஒரு கல்வி மையம். இங்கு பிஸினஸ் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர கேட் (common admission test) என்ற தனி நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகக் கடினமான ஒன்று.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment