தமிழ்சினிமாவில் திருநங்கைகள் என்ற வர்கம் தொடர்ந்து கேலி செய்யப்படுகிறது!
இதை எதிர்த்து நன்கு படித்த திருநங்கைகள் தொடர்ந்து குரல் கொடுத்தபடிதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த அடக்குமுறைகளையும் நகையாடல்களையும் தாண்டி லிவிங் ஸ்மைல் வித்யா, கல்கி போன்றவர்கள் உதவி இயக்குனர்களாவும், கதாநாயகிகளாகவும் திரையுலகத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.
கல்கி நடித்த 'நர்த்தகி' என்ற படத்தை ஜி.விஜயபத்மா இயக்கியிருக்கிறார். புன்னகைப்பூ கீதா தயாரித்திருக்கிறார். இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், "திருநங்கைகளின் வலியையும், அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த சோகத்தையும் கமர்ஷியலாக சொல்லியிருக்கிறீர்கள். அதுவே பெரிய சாதனை" என்று பாராட்டினார்களாம். ஆனால் இந்த படத்தை குழந்தைகள் தனியாக பார்க்க முடியாது. பெற்றவர்களின் ஆலோசனையில்லாமல் பார்த்தால் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது அதே தணிக்கை குழு.
இங்குதான் பிரச்சனையே! "எங்கள் கண்ணீரை சொல்லவும் வெளிப்படுத்தவும் யாருமில்லாதபோது யாரோ ஒருவர் பெரும் பொருட் செலவு செய்து படமாக எடுத்திருக்கிறார். அந்த படத்தையும் எல்லாரும் பார்க்க வழியில்லாதபடி ஏ சான்றிதழ் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று கோஷமிட்டவாறு சென்சார் அமைப்பை முற்றுகையிட்டிருக்கிறார்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள். இதனால் சென்சார் அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.
No comments:
Post a Comment