தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை ஷோபனா திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32. அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் குறிப்பித்தக்க நகைச்சுவை நடிகையாக திகழ்ந்தவர், ஷோபானா. வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் நிறைய படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்தவர்.
'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்ததன் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். மேலும், 'லொள்ளு சபா' மற்றும் 'வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் தொலைக்காட்சி நகைச்சுவை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு வெகுவாக பரிச்சயமானவர் ஷோபனா.
திருமணமாகாத ஷோபனா தனது தாயார் வைரம்ராணியுடன் சென்னை - கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் 'எச்' பிளாக்கில் வசித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஷோபனா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாயார் ராணி வங்கிக்கு சென்று திரும்பிய போது, வீட்டின் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்த ஷோபானாவைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஷோபனாவின் டைரி உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீஸார், இந்தத் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷோபனாவின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை இறுதி சடங்குகள் நடக்கிறது.
No comments:
Post a Comment