தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக்கழகம், இந்திய ïனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக்கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
திருவாரூர் தொகுதியில் முதல்- அமைச்சர் கருணாநிதி போட்டியிடுகிறார். முதல்- அமைச்சர் கருணாநிதி தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் நேற்று இரவு தொடங்கினார்.
இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார். கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலை வகித்தார். தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தென்னன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர்வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றாசற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர்அகமது, நடிகர் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்ட மேடைக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி 7.40 மணிக்கு வந்தார்.
அவர் மேடைக்கு வந்ததும் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் "கலைஞர் வாழ்க, முத்தமிழ் வேந்தர் வாழ்க'' என்று உற்சாக முழக்கமிட்டனர். அவர்களை பார்த்து கருணாநிதி கையசைத்தார். பின்னர் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டத்தில் பேசியதாவது:-
எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடி களித்தேனோ, அந்த மண்ணில்- எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ அந்த மண்ணில்- எந்த மண்ணில் தந்தை பெரியாருடைய தலைமையேற்று வழி நடந்தேனோ, அந்த மண்ணில்- எந்த மண்ணில் அறிஞர் அண்ணா அவர்களுடைய அறிவுரை கேட்டு, அவர் வழியைப் பின்பற்றத் தொடங்கினேனோ, அந்த மண்ணில் நான் இப்போது சட்டப்பேரவைக்கான வேட்பாளனாம். நீங்கள் அறிவித்திருக்கிறீர்கள்.
வேறு வழியின்றி நான் ஒப்புக்கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். எனக்கே ஏற்பட்ட ஆசையின் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் பல திக்கிலும் சென்று சட்டப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். கேட்க மாட்டார்களா- இங்கே வந்து உன் வீரத்தைக் காட்டுகிறாயே, சொந்த மண்ணில் வீரத்தைக் காட்ட உனக்கு ஆற்றல் உண்டா? என்று யாராவது கேட்டுவிட மாட்டார்களா? என்ற அந்த அச்சத்தின் காரணமாகத்தான் சொந்த மண்ணிலே உங்கள் மடியில் அமர்ந்து- உங்கள் கரம் பிடித்து- உங்கள் வழி நடந்து- உங்களுடைய ஆதரவைப் பெற்று இந்த முறை சட்டப் பேரவைக்குச் செல்லலாம் என்று எண்ணி இங்கே வந்திருக்கிறேன்.
திருவாரூர் எனக்குப் புதிய இடமல்ல. 1957-ம் ஆண்டிலிருந்து திருவாரூரிலே தேர்தலிலே போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பிய போது வேறு இயக்கத்திலே உள்ள சில பேர் இவனை இங்கே போட்டியிட விடக் கூடாது என்று இந்தத் தொகுதியையே தனித் தொகுதியாக ஆக்கி எனக்கு இடம் கிடைக்காத ஒரு நிலையை ஏற்படுத்தினார்கள்.
இத்தனை ஆண்டு காலம் பொறுத்திருந்து வாய்ப்புக் கிடைத்தபோது விட்டு விடக்கூடாது என்பதற்காக - கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உங்களுக்காக பணியாற்ற - உங்களுக்காக உழைக்க - உங்களுக்கு தொண்டு செய்ய - உங்களுக்கு வேலை செய்ய உங்கள் உத்தரவை நாடி இன்றைக்கு நான் வந்திருக்கிறேன். நீங்கள் வாக்களித்து அந்த உத்தரவை வழங்கினால் உங்களுக்காக நான் பணியாற்ற, பாடுபட தயாராக இருக்கின்றேன்.
இங்கே நம்முடைய டாக்டர் அவர்கள் பேசும்போது இந்த அணி எத்தகைய உறுதி வாய்ந்தது, உண்மையானது, உங்களுடைய கொள்கைகளுக்கு உடன்பாடானது என்பவைகளையெல்லாம் சொன்னார்கள். இந்த அணி இவ்வளவு உறுதியாக இருப்பதற்குக் காரணமே, கொள்கைதான். இந்த அணி பதவி ஆசையால் ஒன்றோடு ஒன்று ஒட்டப்பட்ட கட்சிகளின் கூட்டல்ல.
இது நம்முடைய கொள்கைகளை, லட்சியங்களை நிறைவேற்ற அமைந்த பாசறை இந்த அணி. நான் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் எனக்கு வாக்களியுங்கள் - தி.மு.க. அணிக்கு வாக்களியுங்கள் - ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்களுக்கெல்லாம் வாக்களியுங்கள் என்று கேட்பேனே தவிர, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்றெல்லாம் பேச விரும்பவில்லை. ஏனென்றால் திருவாரூரிலே இருக்கின்ற அத்தனை பேரும் எனக்குச் சொந்தக்காரர்கள்.
என்னுடைய உறவினர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயர்ந்ததற்கு காரணமாக இருந்தவர்கள். நான் அவர்கள் மீது எதிர்ப்புக்கணைகளை வீசி ஒரு லேசான காயத்தைக் கூட அவர்களுடைய உள்ளத்திலே ஏற்படுத்த விரும்பவில்லை. நான் தப்பித் தவறி அப்படி ஒரு சிராய்ப்பை உங்கள் இருதயத்திலே ஏற்படுத்தினேனேயானால் மன்னித்து விடுங்கள் என்று முதலிலே கேட்டுக் கொண்டு என்னுடைய வேண்டுகோளை உங்கள் முன்னால் வைக்கின்றேன் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் அண்மையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதை நம்முடைய தம்பி திருமாவளவன் அவர்கள், அவருக்கே உரிய வெங்கலக்குரலில் இங்கே எடுத்துச் சொல்லி, அவரைத் தொடர்ந்து பேசியவர்களும், அவருக்கு முன்பு பேசியவர்களும் இந்தத் திட்டங்கள் எவ்வளவு சிலாக்கியமானவை - மக்களுக்கு எவ்வளவு தேவையானது என்பதையெல்லாம் விளக்கியிருக்கின்றார்கள்.
ஆனால் தேர்தல் அறிக்கையிலே சொன்னதை மாத்திரம் தான் நிறைவேற்றுவோம் என்று இல்லை. சொல்லாதவைகளையும் நிறைவேற்றுவோம். சொல்லாதவைகள் மற்றவர்களால் நினைவூட்டப்பட்டவைகள், கோடிட்டுக் காட்டப்பட்டவைகள், ஞாபகப்படுத்தப்பட்டவைகள், புதிதாக சேர்ந்தால் இதுவும் பரவாயில்லையே என்று அந்தத் திட்டத்தின் மீது உள்ள வசீகரத்தால் அல்ல, இதனால் தமிழகத்திலே உள்ள ஏழைபாழைகள், நடுத்தர மக்கள், சாதாரண சாமான்ய மக்கள் பயன்பெறுவார்களே என்ற அந்த நல்ல எண்ணத்தால் அவைகளை நான் இணைத்து நிறைவேற்றியிருக்கின்றேன்.
உங்களை நான் கேட்கிறேன். எண்ணிப் பாருங்கள். கடந்த தேர்தலுக்கு நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு லட்சக்கணக்கான கூரை வீடுகளையெல்லாம் மாற்றி, கருங்கல் வீடுகளாக அல்லது கான்கிரீட் வீடுகளாக கட்டித் தருவேன் என்று அந்த தேர்தல் அறிக்கையிலே சொன்னது உண்டா? இல்லை. போகப் போக இந்த வீடுகள் கட்டப்பட கட்டப்பட அந்த எழுச்சியை பார்த்துப் பார்த்து மகிழ்ந்து இதுமாத்திரம் அல்ல, ஆயிரக்கணக்கான வீடுகளை அல்ல - லட்சக்கணக்கான வீடுகளை உங்களுக்கு கட்டித் தரப்படும் என்று அறிவித்து, பல்லாயிரக்கணக்கான வீடுகளை தமிழகமெங்கும் இந்த அரசின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன.
எஞ்சியுள்ள வீடுகளும் தொடர்ந்து கட்டப்படுகின்றன. இன்னொன்று - நான் சென்னையிலே தமிழகத்திலே பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளி மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அவர்களுடைய முன்னிலையிலே சொன்னேன், நான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அப்பொழுது அறிவித்தேன். ஆனால் அறிவித்ததை அதிகாரப்பூர்வமாக அமலாக்கம்பொழுது ஒரு கிலோ அரிசியை இரண்டு ரூபாய்க்கு தருவேன் என்றதற்கு மாறாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கே மக்களுக்கு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதை சொல்வதற்குக் காரணம் அறிவிக்கும்பொழுது சொன்ன ஒன்றை ஒன்றை மேலும் விரிவுபடுத்தி அதனை அறிவிப்பது தவறாகாது. அந்த முறையில் இந்தத் தேர்தல் அறிக்கையில் அரசு கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தொழிற் கல்வி பயிலவரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு "மடிக் கணினி'' அதாவது "லேப்- டாப்'' வழங்குவோம் என்று உறுதி அளித்திருக்கிறோம். மற்ற அறிவிப்புகளைப்போல இந்த அறிவிப்புக்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அத்தோடு அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் "லேப் - டாப்'' வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் தாழ்த்தப்பட்டோர், பொருளாதார அடிப்படையிலே பிரிக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய சமுதாயத்தினர் என்றெல்லாம் பார்க்காமல் இந்த "லேப் - டாப்'' வழங்குவதை எல்லாப் பிரிவு மாணவர்களுக்கும் வழங்கினால் என்ன என்று தோழமைக் கட்சியிலே உள்ள தலைவர்கள், நண்பர்கள் என்னிடத்திலே கிசுகிசுத்தார்கள். கிசுகிசுப்பு என்பது அபாயகரமானது. ஆகவே அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, இப்போது அறிவிக்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தாழ்த்தப்பட்ட வகுப்பு முன்னேறிய வகுப்பினர் என்றெல்லாம் வகுத்துப் பார்க்காமல் கழக அரசு பல்வேறுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதைப்போல இந்த திட்டத்திலும் இந்த "லேப்- டாப்'' எல்லா பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னொன்று 60 வயதுக்கு மேல் உள்ள மூத்தவர்களுக்கு, நான் இதை அறிவிக்கும்பொழுதே சொன்னேன், என்னைப் போல, பேராசிரியரைப் போல இருப்பவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என்று அன்றைக்கு அறிவித்திருந்தேன்.
இதிலே 59 வயது, 58 வயது உள்ளர்களுக்கெல்லாம் ஒரு குறை, நாங்கள் அந்த அறுபதை தொட எவ்வளவு நாளாகிவிடும், கவலைப் பட்டே கவலைப்பட்டே எங்களுக்கு கிடைக்காதா என்று கவலைப்பட்டே எங்களுக்கு 60 வயதாகிவிடுமே, ஆகவே அதையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டார்கள். எனவே அவர்களுடைய ஓய்வு பெறும் வயது 58. அந்த 58 வயது வரையில் அவர்கள் வேலை பார்த்து ஓய்வு பெறுகிறார்கள். 58 வயதில் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என்பதை இந்தக் கூட்டத்திலே தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதுபோலவே முதலிலே மணல் கடத்தல், அரிசி கடத்தல் போன்ற சமூக தீமைகளை ஒழிப்பதற்கும், கந்து வட்டி கொடுமை நீங்குவதற்கும் சட்ட ரீதியான வழிகளை காண்போம் என்று 19.3.2011 அன்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கொடுமைகளைப் போன்ற மற்றொரு கொடுமை கட்டப் பஞ்சாயத்துக் கொடுமை.
மற்றவர்களின் சொத்தை அபகரிப்பவர்கள், பெருந்தொகையை வசூலித்துக் கொண்டு குடும்பப் பிரச்சினைகளை தலையிட்டு தீர்ப்பதாகக் கூறி, ஊர்ப்புறங்களிலே இரு சாரார்களிடையே உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் பலப்பிரயோகம் செய்து, அச்சுறுத்தி, மிரட்டி, பிரச்சினைகளை நியாயமான முறையிலே சட்ட ரீதியாக தீர்ப்பதை விட, பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு சட்ட விதிமுறைகக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் நடைமுறை இன்னமும் ஆங்காங்கே தலைத் தூக்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
எனவே இந்தக் கொடுமைக்கும் நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க கழக அரசு நிச்சயமாக உரிய வழிமுறைகளை வகுத்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே தீமைகள் அகலவும் - வெளியிடப்பட்டிருக்கின்ற திட்டங்கள் விரிவுப்படுத்தப்படவும் இந்தக் கூட்டத்திலே நான் இந்தக் கருத்துக்களையெல்லாம் வெளியிட்டிருக்கின்றேன். இந்தத் தொகுதி வேட்பாளராக ஆகி விட்டக் காரணத்தால் அடிக்கடி உங்களை சந்திப்பேன்.
தெருவுக்கு தெரு வாக்கு கேட்க வருவேன். இது உங்களுக்கு லாபம், எனக்கு உடல் கஷ்டம் என்றாலுங்கூட உங்களுடைய மகிழ்ச்சியில் எனக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களெல்லாம் சாதாரணமானது. உங்களுடைய புன்னகை, உங்களுடைய புளகாங்கிதம், உங்களுடைய முக மலர்ச்சி, நம் வீட்டு பிள்ளை வருகிறான், என்னதான் 86 வயது ஆனாலும் என்னை விட வயதானவர்களுக்கு நான் பிள்ளைதான் - அவர்களுடைய தம்பிதான், சகோதரன்தான், அந்த உணர்வோடு இரத்த பாசப் பந்தத்தோடு, என்னை இத்தனை ஆண்டு காலமாக அரவணைத்து வளர்த்ததைப்போல், தொடர்ந்து வளர்த்து வர வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
என்னை நீங்கள் வெற்றி பெற வைப்பீர்களோ, இல்லையோ என்ற சந்தேகத்தால் அல்ல, எனக்கும் உங்களுக்கும் ஊக்க மருந்து தரவேண்டும் என்பதற்காக நம்முடைய தலைவர்கள் எல்லாம், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் வந்து, எனக்கு நீங்கள் வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் விரும்பியதைப் போல, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு நான் வரவேண்டும் என்று, அவர்கள் சொன்ன கருத்தை அவர்கள் இட்ட கட்டளையாக ஏற்றுக்கொண்டு; வர முயற்சிக்கிறேன்.
அந்த முயற்சிக்கு நீங்களெல்லாம் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நான் எத்தனை முறை முதலமைச்சராக ஆனாலும் திருவாரூர் தொகுதியிலே வெற்றி பெற்று, எம்.எல்.ஏ. ஆகி அதனால் முதலமைச்சராக ஆவேன் என்றால் அது திருவாரூர் தொகுதிக்கு பெருமை அல்ல. என்னுடைய ஊர், அது என்னை கைவிட வில்லை என்று நான் மற்றவர்களிடத்திலே கம்பீரமாக நின்று பேச, அது துணை நிற்கும் என்பதால் உங்களுக்காக உழைப்பதற்கு என்றென்றும் தயாராக இருக்கிறேன். உத்தரவிடுங்கள், உத்தரவிடுங்கள், ஆணை பிறப்பியுங்கள், அதன்படி நடக்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment