திருவாரூர் மக்கள் பெரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ள அதே நேரத்தில், முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை மக்கள் பெரும் சோகத்தி்ல காணப்படுகின்றனர். காரணம், தங்களது மண்ணின் மைந்தரான கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாதே என்ற வருத்தம்தான்.
முதல்வர் கருணாநிதி பிறந்தது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ் வரும் திருக்குவளை கிராமத்தில். இப்போது திருக்குவளை கிராமம், திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்டதாகும்.
கடந்த 1962ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி சென்னை தொகுதிகளிலேயே மாறி மாறி போட்டியிட்டு வந்தார். தற்போதுதான் முதல் முறையாக அவர் சென்னையிலிருந்து வெளியேறி திருவாரூருக்கு வந்துள்ளார். தான் பிறந்த ஊரை உள்ளடக்கிய மாவட்டத்தில் அவர் போட்டியிட வருவதால் திருவாரூர் மட்டுமல்லாமல் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், கருணாநிதி பிறந்த திருக்குவளையில் ஏமாற்றமும், விரக்தியும் காணப்படுகிறது. காரணம், அவர்களால் கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாது என்பதால். திருக்குவளை கிராமம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்வேளூர் தனி தொகுதியின் கீழ் வருவதால், இவர்களால் திருவாரூரில் போட்டியிடும் கருணாநிதிக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி பிறந்தது திருக்குவளை என்றாலும் கூட அவரது பள்ளிப் படிப்பு நடந்தது திருவாரூரில்தான். அங்குள்ள முரசொலி மாறனின் தாயார் வீட்டில் தங்கியிருந்துதான் பள்ளிப் படிப்பை முடித்தார் கருணாநிதி.
சென்னைக்குப் போனாலும் கூட திருக்குவளை மீது தனிப் பாசம் கொண்டிருந்தார் கருணாநிதி. எங்களுக்காக நிறைய செய்துள்ளார். ஆனால் கடைசியில் அவருக்கு வாக்களிக்க முடியாமல் போய் விட்டதே என்று பெரும் வருத்தமாக உணர்கிறோம் என்கிறார் கருணாநிதியின் குடும்ப நண்பர்களில் ஒருவரான பாவாடைசாமி என்ற முதியவர்.
திருக்குவளை கிராமத்தின் ஒரு பகுதி கீழ் வேளூர் தொகுதியின் கீழ் வருகிறது. இன்னொரு பகுதியை வேதாரண்யத்துடன் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் தொகுதி இத்தனை காலமாக தனித் தொகுதியாக இருந்து வந்தது. தற்போதுதான் அது பொதுத்தொகுதியாகியுள்ளது. இதனால்தான் கருணாநிதி இத்தனை காலமாக சொந்த ஊரில் போட்டியிடாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை நேற்றுதான் அவரே செய்தியாளர்களிடம் கூறினார்.
கருணாநிதி போட்டியிடவுள்ள திருவாரூர் தொகுதியில் பிள்ளைமார், முதலியார், முஸ்லீம் சமுதாயத்தினர் அதிகம் உள்ளனர். இத்தொகுதியின் கீழ் குடவாசல் தாலுகா, நீடாமங்கலம், திருவாரூர் நகராட்சி, கூத்தநல்லூர் நகராட்சி ஆகியவை வருகின்றன.
No comments:
Post a Comment