தேர்தல் கமிஷனின் கடுமையான கெடுபிடிகளால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தடைபட்டுள்ளது. ஆனால் வாக்காளர்களை எப்படியாவது கவனிக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமாக யோசித்து செயல்பட்டு கொண்டிருக்கிறது அரசியல் கட்சிகள். வாகன சோதனையில் லட்சகணக்கில் பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கட்சியினர், வாக்காளர்களை கவனிக்க ஓட்டுக்காக வீடு வீடாக டோக்கன்களை வழங்கி, அந்த டோக்கன்களை நகை கடையில் கொடுத்து மூக்குத்தி, கம்மல், கொலுசு போன்ற பொருட்களை வாங்கி கொள்ள வழிவகை செய்து வருவதாக தகவல் கசியத் துவங்கியுள்ளது.
இதனை தடுக்கும் வகையில் நகை கடைகளுக்கும் தேர்தல் கமிஷன் செக் வைத்துள்ளது. நகை கடைகள் மூலம் கட்சியினர் நடத்தவிருக்கும் தில்லு முல்லுகளை தடுக்க போலீசார் களம் இறங்கியுள்ளனர். அம்பாசமுத்திரத்தில், மூக்குத்தி, கம்மல், 5 கிராம் செயின், 10 கிராம் செயின், வெள்ளி கொலுசு போன்ற பொருட்களை மொத்தமாக யாருக்கும் கொடுக்க கூடாது. ரெகுலர் கஸ்டமர் ஒருவர் 5 கம்மல்கள் கேட்டால், அது அவரது குடும்பத்திற்கு தேவையானது தானா என்பதை உறுதி செய்து கொண்டு வழங்க வேண்டும். டோக்கன் பெற்றுக் கொண்டு யாருக்கும் எந்த விதமான தங்க நகைகளையும் வழங்க கூடாது என போலீசார் நகை கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஓட்டுக்காக, தங்க நகைகள் கை மாறுவதை தடுக்க நகை கடைகளுக்கும் "செக்' வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment