2001 2006 ம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவால், அவர் செய்ததை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட மாட்டார், கொடநாட்டைப் பற்றித்தான் கவலைப்படுவார் என, மு.க.ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின், மார்ச் 27ஆம் தேதி அப்பகுதியில் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,
தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களுடன் இருக்கமாட்டோம். எந்த நேரத்திலும் உங்களுடன் இருப்போம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் கடந்த 5 ஆண்டுகாலத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த உரிமையில்தான் வாக்கு கேட்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தி.மு.க.வின் ஜெராக்ஸ் தேர்தல் அறிக்கைதான். அது புதிதாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை அல்ல. நாங்கள் கடந்த 5 ஆண்டு காலத்தில் செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறோம்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று 5 ஆண்டுகால சாதனை பட்டியலை சொல்லி வாக்கு கேட்கிறோம். 2001 2006 ம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவால், அவர் செய்ததை சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை.
தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட மாட்டார், கொடநாட்டைப் பற்றித்தான் கவலைப்படுவார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.21/2 லட்சம் கடன் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்குவதுடன், அதில் ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையிலோ, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மானியம் தருவதாக பொய் சொல்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இல்லாமல் நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை தற்போது உள்ளது என்றார்.
No comments:
Post a Comment