தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தராததால், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் 7 பேர் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போர்க்கொடி உயர்த்தியதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் இறங்கி, அவர்களை சமாதானப்படுத்தினார்.
41 தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம் என்று தேமுதிக கூறிய பின்னரும் கூட அதன் தொகுதிகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று மாலை வரை அறிவிக்காததால் அக்கட்சியினர் பெரும் குழப்பமடைந்தனர். இன்றாவது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இக்கட்சிக் குழுவினர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதாவுடன், 2 நாட்கள் விடிய விடிய சுமார் 20 மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
அதில் 41 தொகுதிகளையும் அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறிவிட்டுச் சென்றார் பண்ருட்டி. இதனால் நேற்றே விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்று மாலை 4 மணி வரை ஒரு சத்தத்தையும் காணோம்.
நேற்று முழுவதும் தேமுதிக தலைமை அலுவலகம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு படு இறுக்கமாக காணப்பட்டது தேமுதிக அலுவலகம்.
தாங்கள் கேட்ட சில முக்கியத் தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. குறி்ப்பாக சில மாவட்டச் செயலாளர்கள் விஜய்காந்திடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதிமுகவே வேண்டாம், வழக்கம் போல தனித்துப் போட்டியிடுவோம் என்று அவர்கள் விஜயகாந்த்திடம் தெரிவித்தனர்.
இவர்களின் 'டோன்' வழக்கத்திற்கு மாறாக சற்று அழுத்தமாக இருந்ததால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்து இன்று காலை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் 4 தொகுதிகள் தர கோரிக்கை:
இந் நிலையில் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிவிட்டதால் அதிமுக வசம் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 4 இடங்களை தங்களுக்குத் தர வேண்டும் என்று விஜய்காந்த் கோரியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்று பிற்பகலில் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவி்ட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் இல்லை என்பது உறுதியானது.
அதே நேரத்தில் அதிமுகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆலந்தூர், விருகம்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு விட்டுத் தரப்பட்டுள்ளன.
இதில் விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி போட்டியிடுவார் என்று தெரிகிறது.
மிச்சமுள்ள 41 தொகுதிகளில் தான் தேமுதிக போட்டியிட்டாக வேண்டும் என்ற நிலை எழுந்தது. இந் நிலையில் மாலை 4.30 மணிக்கு தனது வேட்பாளர்களின் பட்டியலை விஜய்காந்த் அறிவித்தார்.
தொகுதிகள் விஷயத்தில் என்ன தான் பிரச்சனையும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டாலும் அதிமுக கூட்டணியை விட்டுவிட்டு தனித்துப் போகும் அளவுக்கு தற்போது விஜயகாந்த்தின் நிலை இல்லை என்றும், அந்த அளவுக்கு அதிமுகவிடம் அவர் 'வேறு விஷயங்களில்' வசமாக 'சிக்கி'யுள்ளதாகவும் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த 'சிக்கல்' இல்லாமல் போயிருந்தால் அதிமுக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்த அடுத்த விநாடியே அவர் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்திருப்பார் என்றும் கூறுகிறார்கள்.
தேமுதிகவினர் கார்களில் ஆணையம் சோதனை:
முன்னதாக இன்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தேமுதிகவினரின் கார்களில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வந்திருப்பவர்கள் ஏராளமான பணம் கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment