மாதவரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாதவரம் மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செங்குன்றம் பஸ் நிலையம் அருகில் பிரசாரம் செய்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. இதனால் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளேன். மக்களின் வரி பணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இழப்பீடு மூலம் ஊழலாகி விட்டது. அந்த பணம் உங்களிடம் சேர்க்கப்படும்.
நான் சிறு வயது முதலே எம்.ஜி.ஆர். மீது பற்று உள்ளவன். அவர் ஒவ்வொரு படத்திலும் எந்தெந்த மாதிரி உடை உடுத்தி நடித்தார் என்பது கூட எனக்குத் தெரியும். அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் ஏன் கூட்டு சேர்ந்தார் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம். பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நல்லது தானே. பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று சிலரது கனவு தகர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே என் லட்சியம். எகிப்து, லிபியா நாடுகளில் புரட்சி வெடித்தது போல தமிழக தேர்தலிலும் புரட்சி வெடிக்கும். உங்களுக்கு சிலர் பணம் கொடுக்க வருவார்கள். தயவு செய்து அந்த பணத்தை வாங்காதீர்கள். உங்கள் ஜனநாயக கடமையை சரியாக செய்யுங்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment