விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாகவும், தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அளவுக்கு ம.தி.மு.க.வை நெட்டித்தள்ளியது அ.தி.மு.க.வின் நம்பிக்கைத்துரோகமும் நன்றி உணர்வில்லா பண்புமே ஆகும்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துக்கொண்ட ஒவ்வொரு கட்சியுமே இத்தகைய அவமதிப்புக்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது என்பது உலகறிந்த உண்மை.
கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கும் இத்தகைய நம்பிக்கைத்துரோகத்தை அ.தி.மு.க. செய்தது. அ.தி.மு.க.வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணி உறவானது முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த ஒரு கூடா நட்பு என்பதை ம.தி.மு.க. உணரவேண்டும்.
ஈழம் கூடாது என்பதுடன் புலிகளுக்கு தடை விதிக்கக்காரணம் நான்தான் என்று வெளிப்படையாக அறிவிக்கும் ஜெயலலிதா, பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிக்கவேண்டும் என்று சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியவர்.
தேர்தலை புறக்கணிக்கும் ம.தி.மு.க.வின் இந்த முடிவு வைகோவின் தன்மானத்தைப்பாதுகாக்கும் என்றாலும் கட்சியையும் தொண்டர்களையும் பாதுகாக்குமா? என்பது கேள்விக்குறியே. அ.தி.மு.க. தலைமை இப்படி பழிவாங்கியிருப்பது கடைசி மனிதனாலும் சகித்துக்கொள்ள இயலாததாக உள்ளது. இந்தநிலையில் ம.தி.மு.க. தொண்டர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
எனவே தொண்டர்களின் உணர்வுகளை மதித்து நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டும் வகையில் தேர்தலை ம.தி.மு.க. சந்திக்க வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாகும்’’என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment