தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று வேட்பாளர் தேர்வுக் குழுத் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 43 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் ஏற்கனவே வெளியாகி விட்டது. இதையடுத்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 2 நாட்கள் நடந்த இந்த விருப்ப மனு தாக்கலின்போது கிட்டத்தட்ட 2500 பேர் மனு கொடுத்துள்ளனர்.
இந்தப் பட்டியலுடன் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு டெல்லி வந்துள்ளார். நேற்று இரவு விருப்ப மனு பட்டியலை அவர் வேட்பாளர் தேர்வுக் குழுவிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து விருப்ப மனுக்களை வேட்பாளர் தேர்வுக் குழு பரிசீலித்தது. இக்கூட்டத்தில் குழுத் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், தமிழக பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், மாநிலத் தலைவர் தங்கபாலு, வயலார் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் சிலருடைய பெயர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளனராம். மீதமுள்ளவர்களையும் விரைவில் தேர்வு செய்து கடைசியில் வேட்பாளர் பட்டியலை சோனியா காந்தியின் ஒப்புதலுக்காக வழங்கவுள்ளனர். சோனியா ஒப்புதல் கொடுத்தவுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்று ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் குவிந்த கோஷ்டிகள்!
இதற்கிடையே சீட் வாங்குவதற்காக விருப்ப மனு கொடுத்தவர்கள் பலரும் டெல்லி வந்து குவிந்துள்ளனர். தங்களது கோஷ்டித் தலைவர்களை சந்தித்து சீட் கேட்டு நச்சரித்து வருகின்றனர் இவர்கள்.
இதேபோல புதுச்சேரி , மேற்கு வங்கம், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸாரும் டெல்லியில் குவிந்துள்ளதால் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் அலை மோதுகிறது.
No comments:
Post a Comment